கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதவித்தொகை பெரும் மாற்றுத்திறனாளிகள் ஆவணங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள்
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உதவித்தொகை பெரும் மாற்றுத்திறனாளிகள் ஆவணங்களை சமர்ப்பிக்க நாளை கடைசி நாள் என மாவட்ட கலெக்டர் ஷ்ரவன்குமார் தெரிவித்துள்ளார்.
மனவளர்ச்சி குன்றியோர், 75 சதவீதத்திற்குமேல் கை, கால் பாதிக்கப்பட்ட கடுமையாக பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டோர், தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தண்டுவடத்தால் பாதிக்கப்பட்டு கை, கால் செயலிழந்த மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழ்நாடு அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக பராமரிப்பு உதவித்தொகையாக மாதம் ரூ.2 ஆயிரம் அவரவர் வங்கி கணக்கிற்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளுக்கு முன் மனு கொடுத்து விழுப்புரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக பல ஆண்டுகளாக தொடர்ந்து உதவித்தொகை பெற்று வந்து தற்போது ரூ.2 ஆயிரம் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருபவர்களில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த 2 ஆயிரத்து 26 பேருக்கு 2022-ம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் கள்ளக்குறிச்சி மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் மூலமாக உதவித்தொகை அனுப்பி வைக்கப்படுகிறது.
எனவே உதவித்தொகை பெற்று வரும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் வங்கி கணக்கு, அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டை எண் உள்ளிட்ட விவரங்களை சரிபார்க்கவும், மாற்றுத்திறனாளிகள் அல்லாதவர்கள் தொகை பெறுவது தடுக்கவும் மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை பெற்று வரும் மாற்றுத்திறனாளிகள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு தங்களின் அடையாள அட்டை, ஆதார் அட்டை, வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகலை தங்கள் கிராமம் சார்ந்த கிராம நிர்வாக அலுவலரிடம் நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.