கள்ளக்குறிச்சி மாவட்டத்தில்குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் காலதாமதம் செய்யக்கூடாதுசூப்பிரண்டு மோகன்ராஜ் அறிவுரை
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குற்றவாளிகளை கைது செய்வதில் போலீசார் காலதாமதம் செய்யக்கூடாது என போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் கூறினார்.
திருக்கோவிலூர்,
கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மோகன்ராஜ் நேற்று முன்தினம் இரவு திருக்கோவிலூருக்கு வந்தார். தொடர்ந்து அவர் சந்தைப்பேட்டையில் உள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் நிலுவையில் உள்ள வழக்கு விவரம் குறித்து கேட்டறிந்தார். பின்னர் அவா் போலீசாருடன் ஆலோனை நடத்தினார். அப்போது அவர் கூறியதாவது:-
போலீஸ் நிலையத்திற்கு புகார் கொடுக்க வருபவர்களை அன்புடன் வரவேற்று அவர்கள் கொடுக்கும் புகார்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக வழக்குப்பதிவு செய்வதோடு நின்றுவிடாமல் நியாயமான முறையில் விசாரணை மேற்கொண்டு காலதாமதம் இல்லாமல் குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அப்போதுதான் காவல்துறையின் மீது சாதாரண மக்களுக்கும் நம்பிக்கை வரும். கஞ்சா, குட்கா மற்றும் சாராயம் போன்ற போதை பொருட்கள் விற்பனையை 100 சதவீதம் தடுக்க வேண்டும்.
நியாயமான உரிமைகளுக்கு ஆதரவு
மணல் கடத்தல் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடுபவர்கள் குறித்து தகவல் தெரிந்தால் இரும்பு கரம் கொண்டு அடக்க வேண்டும். அதேபோல் திருட்டு உள்ளிட்ட குற்ற வழக்குகளில் உடனுக்குடன் குற்றவாளிகளை கைது செய்வதுடன் திருட்டு போன பொருட்களை மீட்டு உரியவர்களுக்கு தருவதில் போலீசார் மிகுந்த அக்கரை செலுத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு உங்கள் அளவிலேயே நியாயம் கிடைத்து விட்டால் நல்லது. என்னிடத்தில் பாதிக்கப்பட்டவர்கள் நேரில் வந்து நியாயம் கிடைக்கவில்லை என்று கூறினால் விசாரணையில் சரியான முறையில் நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர் பாதிக்கப்படுவார்கள். அதேசமயம் போலீசாரின் நியாயமான உரிமைகளுக்கு எனது ஆதரவு எப்பொழுதும் இருக்கும். காவல்துறையினரின் செயல்பாடு ஒட்டுமொத்த தமிழக காவல்துறைக்கும் தமிழக அரசுக்கும் பெருமை சேர்ப்பதாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார். அப்போது துணை போலீஸ் சூப்பிரண்டு பழனி, திருக்கோவிலூர் இன்ஸ்பெக்டர் பாபு, அனைத்து மகளிர் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ராதிகா, சங்கராபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாண்டியன் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.