கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி கலெக்டர் ஷ்ரவன் குமார் தகவல்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுவதாக கலெக்டர் ஷ்ரவன் குமார் தெரிவித்துள்ளார்.

Update: 2022-12-10 18:45 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறையின் மாவட்ட தொழில் மையங்கள் மூலமாக செயல்படுத்தப்பட உள்ள 60 விழுக்காடு நிதிப்பங்களிப்புடன் கூடிய பிரதமரின் உணவு பதப்படுத்தும் குறுந்தொழில் நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் திட்டத்தின்கீழ் சுயதொழில் கடனுதவி பெற்று பயனடையலாம்.

மானியத்துடன் கூடிய சுயதொழில் கடனுதவி திட்டத்தின் உணவு பதப்படுத்தல் வகைப்பாட்டின்கீழ் அடங்கும் பழச்சாறு, பழக்கூழ் தயாரித்தல், ஊறுகாய், வற்றல், அரிசிஆலை, உலர் மாவு மற்றும் ஈர மாவு தயாரித்தல், உணவு எண்ணெய் பிழிதல், மரச்செக்கு எண்ணெய், பேக்கரி பொருட்கள், தின்பண்டங்கள் தயாரித்தல், மசாலா பொடிகள் தயாரித்தல், பால் பொருட்கள் தயாரித்தல், இறைச்சி மற்றும் மீன் வகைகள் பதப்படுத்துதல் போன்ற தொழில்களை தொடங்கவும், ஏற்கனவே நடத்தப்பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்கம் மற்றும் தொழில் நுட்ப மேம்படுத்துதல் செய்தும் பயன்பெறலாம்.

மானியத்துடன் கடனுதவி

மேலும் ரூ.1 கோடி வரையிலான திட்டத்தொகை கொண்ட உணவு பதப்படுத்தும் தொழில் திட்டங்கள் இத்திட்டத்தின்கீழ் உதவி பெறத் தகுதி பெற்றவையாகும். திட்டத்தொகையில் 10 சதவீதம் முதலீட்டாளர் தம் பங்காகச் செலுத்த வேண்டும். 90 சதவீதம் வங்கிகளால் பிணையமில்லாக் கடனாக வழங்கப்படும். அரசு 35 சதவீதம் மானியம் அதிகபட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கும். சுய உதவிக் குழுவினர் உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் ரூ.40 ஆயிரம் வீதம் தொடக்க நிலை மூலதனமாக வழங்கப்படும். உணவுப்பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு தேவையான பொது கட்டமைப்பு வசதிகள் மற்றும் பொது வசதியாக்க மையங்களை ஏற்படுத்திட திட்டத் தொகையில் 35 சதவீதம் மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். இத்திட்டத்தின்கீழ் பயனபெற pmfme.mofpi.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தினை பதிவு செய்ய வேண்டும்.

ஆர்வமுள்ள தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள், சுய உதவிக்குழுக்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மற்றும் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கங்கள் இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்தி பயன்பெறலாம்.

இத்திட்டம் குறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழிகாட்டுதல்கள் பெற கள்ளக்குறிச்சி ராஜாநகரில் உள்ள மாவட்ட தொழில் மைய பொதுமேலாளரை நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம்.

மேற்கண்ட தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்