நரிக்குடி யூனியன் தலைவராக காளீஸ்வரி போட்டியின்றி தேர்வு

நரிக்குடி யூனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் காளீஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

Update: 2023-08-23 19:45 GMT

காரியாபட்டி

நரிக்குடி யூனியன் தலைவர் தேர்தலில் தி.மு.க. கவுன்சிலர் காளீஸ்வரி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார். தேர்தல் பாதுகாப்பு பணியில் 200-க்கு மேற்பட்ட போலீசார் ஈடுபட்டனர்.

நரிக்குடி யூனியன்

நரிக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14 கவுன்சிலர்கள் உள்ளனர். இந்த யூனியன் தலைவராக இருந்து வந்த பஞ்சவர்ணம் மீது தி.மு.க. கவுன்சிலர்கள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின்படி யூனியன் தலைவர் பஞ்சவர்ணம் பதவி பறிக்கப்பட்டது. இதனையடுத்து நரிக்குடி யூனியன் தலைவர் பதவி காலியாக இருந்த நிலையில் கவுன்சிலர்கள் கூட்டம் நடைபெறாமல் வளர்ச்சிப்பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் யூனியன் துணைத்தலைவராக இருந்த அ.தி.மு.க.வை சேர்ந்த ரவிச்சந்திரனை யூனியன் (பொறுப்பு) தலைவராக செயல்பட மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவு பிறப்பித்தார். இதனையடுத்து நரிக்குடி யூனியன் (பொறுப்பு) தலைவராக ரவிச்சந்திரன் கடந்த 3-ந்தேதி பொறுப்பேற்ற நிலையில், ஆகஸ்டு 23-ந்தேதி நரிக்குடி யூனியன் தலைவர் தேர்தல் நடைபெறுமென மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.

போட்டியின்றி தேர்வு

இந்த நிலையில் யூனியன் தலைவர் தேர்தல் நரிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் 11 கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். 3 அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பங்கேற்கவில்லை.

யூனியன் தலைவர் பதவிக்கு 3-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் காளீஸ்வரி சமயவேலு மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்ததால் அவர், போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.

தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை தேர்தல் நடத்தும் அதிகாரிகள் காளீஸ்வரியிடம் வழங்கினா்.

பாதுகாப்பு பணி

தேர்தலின்போது 200-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

பதவி ஏற்ற யூனியன் தலைவர் காளீஸ்வரிக்கு நரிக்குடி ஒன்றிய செயலாளர் போஸ்த்தேவர், கண்ணன், முன்னாள் யூனியன் தலைவர் ஜெயராஜா, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன், மாவட்ட கவுன்சிலர் கமலி பாரதி, வீரசோழன் மாரிமுத்து, வேளாநேரி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் பாலமுருகன், ஒன்றிய பொருளாளர் கோபாலகிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர்கள் அன்புச்செல்வி, ஜெயலட்சுமி, மீனாள், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், தி.மு.க. பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்