தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்பு பயிற்சி

தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்பு பயிற்சி

Update: 2022-07-10 12:05 GMT

போடிப்பட்டி,

உடுமலை வட்டாரத்தில் தேர்வு செய்யப்பட்ட 50 விவசாயிகளுக்கு தோட்டக்கலைத்துறை மூலம் காளான் வளர்ப்புப் பயிற்சி வழங்கப்பட்டது.

காளான் வளர்ப்பு பயிற்சி

உடுமலை வட்டாரத்தில் 50 விவசாயிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு மானாவாரி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒருங்கிணைந்த பண்ணையம் குறித்த பயிற்சிகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக விவசாயிகள் கூடுதல் வருமானம் ஈட்ட வழிகாட்டும் வகையில் காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வழங்கப்பட்டது.

உடுமலை தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் தலைமையில் ஆனைமலையையடுத்த பெரியபோது கிராமத்தில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வரும் விவசாயி கோபால் காளான் வளர்ப்புப் பயிற்சிகள் வழங்கினார்.

இதுகுறித்து தோட்டக்கலைத்துறை உதவி இயக்குனர் கோபிநாத் கூறியதாவது:- காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை ஈரப்பதம் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே மழைக் காலங்களில் அதிக மகசூலும், கோடை காலத்தில் குறைந்த மகசூலும் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. காளான் வளர்ப்பைப் பொறுத்தவரை சந்தைப்படுத்துதல் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தந்த பகுதிகளின் தேவை அறிந்து சிப்பிக் காளான், பால் காளான், மொட்டுக்காளான் உள்ளிட்ட ராகங்களின் வளர்ப்பில் ஈடுபடலாம்.

குறைந்த முதலீட்டில் சிறந்த லாபம்

முதல் கட்டமாக சிறிய அளவில் உற்பத்தியைத் தொடங்கி தேவை அடிப்படையில் படிப்படியாக அதிகரிக்கலாம். உழவர் சந்தை உள்ளிட்டவற்றின் மூலம் பொதுமக்களிடம் நேரடியாக சந்தைப்படுத்துதல் கூடுதல் லாபம் தரும்.

தினசரி 2 மணி நேரம் ஒதுக்கி முறையான பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதன் மூலம் நல்ல மகசூல் ஈட்ட முடியும். குறைந்த அளவிலான முதலீட்டில் சிறந்த லாபம் ஈட்டக்கூடிய தொழிலாக காளான் வளர்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்