ஓவிய - சிற்ப கலைஞர்களுக்கு கலை செம்மல் விருது: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்
கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் ஓவிய - சிற்ப கலைஞர்களுக்கு கலை செம்மல் விருது அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார்.
சென்னை,
தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் சென்னை அரசு அருங்காட்சியக வளாகத்தில் ஓவியம் மற்றும் சிற்ப கலைஞர்களுக்கு கலைச் செம்மல் விருதுகள் வழங்கும் விழா நடந்தது. இதில் தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பங்கேற்றார். சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை அரசு முதன்மைச் செயலாளர் க.மணிவாசன், கலை பண்பாட்டுத் துறை இயக்குனர் காந்தி உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
விழாவில் மரபு வழி கலைஞர்கள் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (ஓவியம்), ல.ராதாகிருஷ்ணன் (சிற்பம்), த.வை.முருகன் (சிற்பம்) ஆகியோருக்கும், நவீன பாணி கலைஞர்கள் மு.ராமலிங்கம் (ஓவியம்), மு.வேலாயுதம் (சிற்பம்), ஆ.லோகநாதன் (சிற்பம்) ஆகியோருக்கும் கலைச்செம்மல் விருது மற்றும் ரூ.1 லட்சம் ரொக்கத்தை அமைச்சர் சாமிநாதன் வழங்கினார்.
மேலும் மாநில அளவிலான கலைக்காட்சிக்காக ஓவியம் மற்றும் சிற்பக் கலைஞர்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 225 கலைப் படைப்புகளின் கண்காட்சியை அமைச்சர் சாமிநாதன் தொடங்கிவைத்தார். இக்கண்காட்சியில் இடம் பெறும் கலைப் படைப்புகளில் சிறந்தவற்றை உருவாக்கிய 30 மூத்த கலைஞர்களுக்கு தலா ரூ.15 ஆயிரமும், 20 இளம் கலைஞர்களுக்கு தலா ரூ.10 ஆயிரமும் என மொத்தம் ரூ.6.5 லட்சம் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.
விழாவில் 10 கலையாசிரியர்கள் மற்றும் 3 சிறந்த கலை நூலாசிரியர் என 13 கலையாசிரியர்களுக்கு பரிசுத் தொகையாக தலா ரூ.10 ஆயிரம் வழங்கப்பட்டன.