கடையநல்லூர்:
கடையநல்லூர் நகராட்சியில் சாதாரண கூட்டம் நகர்மன்ற தலைவர் ஹபீபுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
கூட்டம் தொடங்கியதும் அ.தி.மு.க. 3-வது வார்டு கவுன்சிலர் சுபா ராஜேந்திர பிரசாத், "மக்களுக்கு தேவையான அடிப்படை தேவையான கழிவுநீர் ஓடை தூர்வாருதல், தெருவிளக்கு, சாலை வசதி, குடிநீர் பிரச்சினைகள் போன்ற பணிகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் தீர்மானமாக கொண்டு வர வேண்டும். நகராட்சி பொறியியல் பிரிவு ஊழியர்களுக்கு தனி அறை கட்டும் தீர்மானத்தை கைவிட வேண்டும்" என்றார்.
அதனைத் தொடர்ந்து 2-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையா தாஸ், தாமிரபரணி குடிநீர் அனைத்து பகுதிகளுக்கும் வழங்காமல் குடிநீர் தரம் குறித்து ஆய்வு செய்ய பல லட்சம் செலவழிக்கப்பட்ட ரூபாய் குறித்து பேசுவதற்கு எழுந்தார்.
அப்போது குறுக்கிட்ட நகர்மன்ற தலைவர், பேசாமல் உட்காருங்கள் என கூறி முஸ்லிம் லீக் கவுன்சிலர் அக்பர் அலியை பேசுவதற்கு அழைத்தார். உடனே கவுன்சிலர் அக்பர் அலி, அ.தி.மு.க. கவுன்சிலர் பூங்கோதை கருப்பையா தாஸ் பேசட்டும் என குறிப்பிட்டார்.
இருப்பினும் முஸ்லிம் லீக் கவுன்சிலர் அக்பர் அலி பேசுமாறு தலைவர் வலியுறுத்தினார்.
இதனை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் பூங்கோதை கருப்பையா தாஸ், சந்திரா, சண்முகசுந்தரம், துர்கா தேவி, சுபா ராஜேந்திர பிரசாத், பா.ஜனதா கட்சி கவுன்சிலர்கள் சங்கரநாராயணன், ரேவதி பாலீஸ்வரன், மகேஸ்வரி ஆகியோர் வெளிநடப்பு செய்தனர்.