உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. சுகாதார வளாக வசதி இல்லாததால் வீராங்கனைகள் அவதிப்பட்டனர்.
கபடி
தமிழர்களின் அடையாளம் வீரவிளையாட்டாக கருதப்படும் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் முன்பு செய்யப்படும் பயிற்சியே கபடியாகும். உடலையும், மனதையும் பலப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந்த விளையாட்டு தமிழ் மண்ணில் தமிழர்களால் உருவாக்கப்பட்டு ஆசிய கண்டத்தின் தெற்கு பகுதியில் பிரபலமாக உள்ளது.
கபடி, சடுகுடு, பலிஞ் சடுகுடு என்று அழைக்கப்படும் கபடி நமது மாநிலத்தின் விளையாட்டாக உள்ளது. வரலாற்றுப்பெருமைமிக்க கபடியை பள்ளி கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகள் பயின்று போட்டிகளிலும் பங்கேற்று நமது கலாசாரம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
மாநில அளவிலான போட்டி
அந்த வகையில் உடுமலை நேதாஜி விளையாட்டு மைதானத்தில் மாநில அளவிலான கபடி போட்டி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் மின்னொளியில் தொடங்கிய இந்த போட்டி நேற்று இரவு சுமார் 10 மணி வரை நீடித்தது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த ஆண்கள் பிரிவில் 55 அணிகளும், பெண்கள் பிரிவில் 22 அணிகளும் கலந்து கொண்டன. மழையின் அச்சுறுத்தல் இருந்ததால் கூடாரம் அமைக்கப்பட்டு செயற்கை தளத்தில் போட்டிகள் நடைபெற்றது.
முதல் தளத்தில் பெண்களும் 2- ம் தளத்தில் ஆண்களும் போட்டியில் ஈடுபட்டனர். விறுவிறுப்பு உற்சாகம் பரபரப்புடன் நடந்து முடிந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
முதல் பரிசாக ரூ.10 ஆயிரத்து 202-ம், 2-ம் பரிசாக ரூ.6ஆயிரத்து 202-ம், 3 மற்றும் 4-ம் பரிசாக ரூ.3 ஆயிரத்து 202-ம் இரு பிரிவினருக்கும் வழங்கப்பட்டது. கால் இறுதி ஆட்டத்தில் தோல்வியுற்ற ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு சிறப்பு பரிசாக ரூ.1000 மற்றும் கோப்பையும் வழங்கப்பட்டது.
சுகாதார வளாக வசதி இல்லை
ஆனால் நேதாஜி மைதானத்தில் சுகாதார வளாக வசதி இல்லாததால் போட்டிக்கு வந்திருந்த வீரர் வீராங்கனைகள் இயற்கை உபாதைகளை கழிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனால் அவர்கள் மனம் மற்றும் உடல்ரீதியாக சோர்வு அடைந்ததால் ஆட்டத்தில் முழு ஈடுபாடு காட்ட முடியாத சூழல் நிலவியது.
இந்த மைதானத்தில் சுகாதார வளாகம் அமைக்க வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது. ஆனால் நிர்வாகம் கண்டு கொள்ளாமல் உள்ளது. அடிப்படை அத்தியாவசிய தேவையான சுகாதார வளாகத்தை ஏற்படுத்திக் கொடுப்பதற்கு அதிகாரிகள் முன்வர வேண்டும்.இதனால் வீரர், வீராங்கனைகள் போட்டியில் உடல்ரீதியாக முழு பலத்தோடு ஈடுபடுவதற்கு ஏதுவாக இருக்கும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவித்தனர்.