மதுபாட்டிலால் கபடி வீரர் மண்டை உடைப்பு; 2 பேருக்கு வலைவீச்சு
பெரியகுளத்தில் கபடி வீரரை மதுபாட்டிலால் மண்டையை உடைத்த 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் பெருமாள்புதூரை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது 26). கபடி வீரரான இவர் நேற்று முன்தினம் பெரியகுளம் அருகே எண்டப்புளியில் நடைபெற்ற கபடி போட்டியில் தனது நண்பர்களுடன் கலந்துகொண்டு விளையாடினார். கபடி போட்டி முடிந்ததும் சிவக்குமார் ஓய்வெடுத்தார். அப்போது எண்டப்புளியை சேர்ந்த அவரது உறவினர்களான பிரபு (25), விவேக் (24) ஆகியோர் அங்கு வந்தனர்.
அப்போது 2 பேரும் சேர்ந்து சிவக்குமாரை தகாத வார்த்தைகளால் பேசியதுடன், மதுபாட்டிலால் அவரது தலையில் தாக்கினர். இதில் தலையில் இருந்து ரத்தம் சொட்ட காயமடைந்த சிவக்குமார் சிகிச்சைக்காக பெரியகுளம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின்பேரில் பெரியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரபு, விவேக்கை வலைவீசி தேடி வருகின்றனர்.