கடம்பூர் பகுதியில் கன மழை காட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
காட்டாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளம்
கடம்பூர் பகுதியில் பெய்த கன மழை காரணமாக அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
காட்டாறு
சத்தியமங்கலத்தை அடுத்து மலைப்பகுதியில் கடம்பூர் கிராமம் உள்ளது. இங்குள்ள அடர்ந்த வனப்பகுதியில் மாக்கம்பாளையம் மலைக்கிராமம் உள்ளது. சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையத்துக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது.
கடம்பூரில் இருந்து மாக்கம்பாளையம் செல்ல வேண்டும் என்றால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் ஆகியவற்றை கடந்து தான் வாகனங்கள் செல்ல வேண்டும். இந்த 2 பள்ளங்களின் வழியாகவும் காட்டாறு செல்கிறது. மழைக்காலங்களில் இந்த காட்டாறுகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது வாகன போக்குவரத்து நடைபெறாது. எனவே குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
கன மழை
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கடம்பூர், குன்றி, மாக்கம்பாளையம் உள்ளிட்ட மலைப்பகுதியில் பெய்த கன மழையால் அங்குள்ள காட்டாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் குரும்பூர் பள்ளம், சர்க்கரை பள்ளம் பகுதியில் காட்டாற்று வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இந்த நிலையில் நேற்று காலை சத்தியமங்கலத்தில் இருந்து கடம்பூர் வழியாக மாக்கம்பாளையம் நோக்கி பயணிகளுடன் அரசு பஸ் ஒன்று சென்றது. அப்போது அங்குள்ள சர்க்கரை பள்ளம் என்ற இடத்தில் உள்ள காட்டாற்றில் மழைநீர் ஓடிக்கொண்டிருந்தது.
பொதுமக்கள் அவதி
எனினும் அந்த பஸ் குரும்பூர் பள்ளத்தை கடந்து சர்க்கரை பள்ளம் நோக்கி சென்றது. ஆனால் சர்க்கரை பள்ளத்தில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதனால் சர்க்கரை பள்ளத்தை பஸ்சால் கடக்க முடியவில்லை. இதைத்தொடர்ந்து பயணிகளை பாதுகாப்பாக இறக்கி விட்டு பஸ் அங்கிருந்து திரும்பி சென்றுவிட்டது. இதன்காரணமாக கிராமங்களுக்கு செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டனர். பின்னர் வெள்ளம் குறைந்தவுடன், அந்த வழியாக வந்த வாகனங்களில் ஏறி தங்களுடைய கிராமங்களுக்கு மலைவாழ் மக்கள் சென்றனர். ஒரு சிலர் ஆபத்தை உணராமல் நடந்தும், வாகனங்களிலும் காட்டாற்றை கடந்து சென்றனர்.
எனவே மலைவாழ் மக்களின் நலன் கருதி குரும்பூர் பள்ளம் மற்றும் சர்க்கரை பள்ளம் ஆகிய இடங்களில் உயர்மட்ட பாலம் கட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.