தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் - கே.பாலகிருஷ்ணன் குற்றச்சாட்டு
தேர்தலுக்கு முன்பு நாட்டின் அமைதியை சிதைக்கவே அரியானா கலவரம் என்று கே.பாலகிருஷ்ணன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
சென்னை,
சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறி செயல்களை தூண்டிவிடுவதன் மூலம், பெரும்பான்மை மதத்தினரின் உணர்வுகளை தமக்கு சாதகமாக்கி வாக்குகளை அறுவடை செய்யலாம் என ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நினைக்கின்றன என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அரியானா மாநிலத்தில், விஷ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள் உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ் பரிவார அமைப்புகள் நடத்திய ஆயுதம் தாங்கிய பேரணி திட்டமிட்ட கலவரமாக மாற்றப்பட்டு ஏராளமான உயிர்களையும், உடமைகளையும் அழித்துள்ளது. நிலைமை கட்டுக்குள் வராவிட்டால் தலைநகர் டெல்லியும் கலவரக் காடாகும் என்கிற நிலையில், வெறுப்புப் பேச்சுக்களையும், வன்முறையையும் கட்டுப்படுத்த காவல்துறையும், ஆயுதம் ஏந்திய காவலர்களும் கூடுதலாக களமிறங்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திட்டமிட்ட வகுப்புவாத வெறுப்பு மூட்டலுக்கு எதிராக உறுதியுடன் கண்டனம் முழங்கிட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அழைக்கிறது.
மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே 3 ஆம் தேதி தொடங்கிய வன்முறை இரண்டு மாதங்களுக்கும் மேலாக கொழுந்துவிட்டு எரிகிறது. நாடு முழுவதும் கண்டனக் குரல் எழுந்தபோதும் ஒன்றிய பாஜக அரசும், அரியானா மாநில அரசும் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை. பிரதமர் நாடாளுமன்றம் சென்று இதுகுறித்து பேசுவதற்கு இன்னமும் மறுக்கிறார். இப்போது அரியானா மாநிலத்தில் பஜ்ரங்கள், வி.ஹெச்.பி நடத்திய பேரணியில் வன்முறை வெடித்துள்ளது. இதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தென்பட்ட பிறகும் அரசு நிர்வாகமும், காவல்துறையும் கண்டுகொள்ளவில்லை.
அரியானாவில் நடைபெற்ற வன்முறையில் அஞ்சுமான் மசூதிக்கு தீவைக்கப்பட்டது, 26 வயதேயான இமாம் சாத் கொல்லப்பட்டார். இன்னும் பல உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 8 காவல்துறை வாகனங்கள் உட்பட 120 வாகனங்கள், 14 கடைகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் அழிக்கப்பட்டுள்ளன. பேரணிக்கு அனுமதி பெற்ற போது ஆயுதங்கள் பயன்படுத்தப்படாது என உறுதியளித்த வி.ஹெச்.பி., பஜ்ரங்தள் அமைப்பினர், கொடுத்த உறுதியை மீறியுள்ளனர்; வன்முறையைத் தூண்டும் நடவடிக்கைகளில் திட்டமிட்டு ஈடுபட்டுள்ளனர். இப்போது நாட்டின் தலைநகர் டெல்லி உள்ளிட்ட பகுதிகளிலும் பேரணிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். மாநில அரசின் கூட்டணியில் உள்ள ஜன்நாயக் ஜனதா கட்சியும், குர்கான் பிஜேபி எம்.பி.யும் இந்த வன்முறையை கண்டித்துள்ளனர்.
இதே காலகட்டத்தில், ஜெய்ப்பூர்-மும்பை ரெயிலில், ரெயில்வே பாதுகாப்பு படை (RPF) காவலர் ஒருவர் தன்னுடைய உயர் அதிகாரியையும், தனக்கு எந்த அறிமுகமும் இல்லாத முஸ்லிம்கள் 3 பேரையும் சுட்டுக் கொலை செய்துவிட்டு, 'மோடி - யோகி' பெயரைச் சொல்லியபடி வெறுப்புப் பேச்சை வெளியிட்ட கொடுரமும் நடந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாக நாட்டின் அமைதி சூழலையே மொத்தமாக சிதைத்துப் போட்டு, வகுப்புவாத வெறித் தீயை மூட்டிவிடும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாகவே இந்த வன்முறை சம்பவங்களைப் பார்க்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு எதிரான வெறி செயல்களை தூண்டிவிடுவதன் மூலம், மத அடிப்படையிலான வெறித்தூண்டலுக்கும், மோதல்களுக்கும் வழிவகுத்தால் அதன் மூலம் பெரும்பான்மை மதத்தினரின் உணர்வுகளை தமக்கு சாதகமாக்கி வாக்குகளை அறுவடை செய்யலாம் என ஆர்எஸ்எஸ் பரிவாரங்கள் நினைக்கின்றன. இதனை நாம் உறுதியுடன் எதிர்த்து வீழ்த்திட வேண்டும்.
வகுப்புவாத வெறித் தூண்டலுக்கு எதிராக, அனைத்து மக்களும் மதச்சார்பற்ற ஜனநாயகத்தை பாதுகாக்கவும் ஆர்.எஸ்.எஸ்-பாஜக வெறுப்பு அரசியலை வீழ்த்திடவும் உறுதியுடன் குரல் கொடுக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு அறைகூவி அழைக்கிறது. கட்சி அமைப்புக்கள் வாய்ப்புள்ள எல்லா இடங்களிலும் கண்டன இயக்கங்களை முன்னெடுக்கவும், மக்கள் ஒற்றுமை குரல்களை வலுப்படுத்தவும் வேண்டும் என்றும், தமிழ்நாட்டு மக்கள் இந்த இயக்கங்களுக்கு ஏகோபித்த ஆதரவை வழங்கிட வேண்டுமெனவும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநில செயற்குழு வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறது.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.