சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ். முரளிதரரை நியமிக்க கொலிஜியம் பரிந்துரை
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக எஸ். முரளிதரரை நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு பரிந்துரை செய்துள்ளது.
புதுடெல்லி,
ஒரிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருப்பவர் எஸ். முரளிதர். கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ல் ஒரிசா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
இந்த நிலையில், அவரை சென்னை ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக நியமிக்க சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழு முடிவு செய்துள்ளது. இதுசம்பந்தமாக, சுப்ரீம் கோர்ட்டு மூத்த நீதிபதிகள் குழுவின் கூட்டம் கடந்த 28-ந்தேதி நடந்தது. அப்போது இந்த முடிவை நீதிபதிகள் எடுத்துள்ளனர்.
பின்னர், இதுதொடர்பான பரிந்துரையை மத்திய அரசுக்கும், ஜனாதிபதிக்கும் அனுப்பி உள்ளனர். எனவே விரைவில் எஸ். முரளிதர், ஐகோர்ட்டின் தலைமை நீதிபதியாக பதவி ஏற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் கடந்த 1961 ஆம் ஆண்டு ஆக.8 ஆம் தேதி பிறந்த முரளிதர், டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக 2006-ம் ஆண்டு பதவி ஏற்றார். பஞ்சாப்-அரியானா ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக கடந்த 2020-ம் ஆண்டு மார்ச்.6 ல் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அதன்பின், கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 31-ல் ஒரிசா ஐகோரட்டு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டின் 33-ஆவது தலைமை நீதிபதியாக எஸ். முரளிதர் பொறுப்பேற்க உள்ளார்.