தனியார் மில்களில் நீதிபதி ஆய்வு
மேட்டுப்பாளையத்தில் தனியார் மில்களில் நீதிபதி ஆய்வு
கோவை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் மற்றும் சார்பு நீதிபதியான கே.எஸ்.எஸ்.சிவா கோவை மாவட்டத்தில் உள்ள தனியார் மில்களில் ஆய்வு செய்து வருகிறார்.
இந்த நிலையில் அவர் மேட்டுப்பாளையத்தில் உள்ள 3 தனியார் மில்களில் ஆய்வு செய்தார். அபபோது அவர் அங்கு வேலை செய்து வரும் தொழிலாளர்களை சந்தித்து வேலைக்கு ஏற்றபடி சம்பளம் வழங்கப்படுகிறதா? விடுமுறை சரியாக கொடுக்கப்படுகிறதா என்பது குறித்து கேட்டறிந்தார்.
அதுபோன்று மில் வளாகத்தில் தங்கி இருந்து வேலை செய்து வரும் தொழிலாளர்களிடம் பெற்றோர் மற்றும் உறவினர்களை சந்திக்க அனுமதி வழங்கப்படுகிறதா?, வேலை தொடர்பாக முன்பணம் கொடுக்கப்பட்டு உள்ளதா என்று கேட்டறிந்தார்.
அத்துடன் தனியார் மில்களில் பணியாற்றி வரும் வடமாநில தொழிலாளர்களுக்கு கட்டாயம் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.
இந்த ஆய்வின்போது குழந்தை மீட்பு குழு திட்ட இயக்குனர் விஜயகுமார், தொழிலாளர் பாதுகாப்பு நலத்துறை மற்றும் பல்வேறு துறையை சேர்ந்த அதிகாரிகள் உடன் இருந்தனர்.