மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 3 ஆண்டு ஜெயில்; ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

Update: 2023-01-11 20:59 GMT

மனைவியை தற்கொலைக்கு தூண்டிய கணவருக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து ஈரோடு மகிளா கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

குடிப்பழக்கம்

புதுப்பாளையம் பழனிகவுண்டன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேஷ் (வயது 38). கூலி தொழிலாளி. இவருடைய மனைவி ஜோதிமணி (35). இவர் ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் செவிலியராக வேலை பார்த்து வந்தார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மாதேசுக்கு குடிப்பழக்கம் இருந்ததால் கணவன்- மனைவிக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.

இந்தநிலையில் கடந்த 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 28-ந்தேதி மாலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டு ஜோதிமணி வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டில் மதுபோதையில் மாதேஷ் இருந்ததால் ஜோதிமணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளார்.

3 ஆண்டு ஜெயில்

அப்போது மாதேஷ் ஆத்திரம் அடைந்து ஜோதிமணியை செத்து தொலை என்றும், செத்தால் தான் 2-வது திருமணம் செய்ய முடியும் என்று கூறி உள்ளார். இதனால், மனவேதனை அடைந்த ஜோதிமணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து மலையம்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாதேசை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பான வழக்கு விசாரணை ஈரோடு மகிளா கோர்ட்டில் நடந்து வந்தது.

இந்த நிலையில் வழக்கு விசாரணை முடிந்து நீதிபதி மாலதி நேற்று தீர்ப்பு கூறினார். அவர் தனது தீர்ப்பில், மனைவியை தற்கொலைக்கு தூண்டிய மாதேசுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் ஜெயந்தி ஆஜரானார்.

Tags:    

மேலும் செய்திகள்