கூட்டுக்குடிநீர் திட்ட கட்டிட பணிகள் நிறுத்தம் எதிரொலி:முல்லைப்பெரியாற்றில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல்:விவசாயிகள் கவலை

முல்லைப்பெரியாற்றில் முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

Update: 2023-05-16 18:45 GMT

லோயர்கேம்பில் இருந்து மதுரைக்கு குழாய்கள் மூலம் குடிநீர் கொண்டு செல்லும் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கூடலூர் குருவனூற்று பாலம் அருகே வண்ணான்துறை பகுதியில் முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய தடுப்பணை கட்டப்பட்டு வருகிறது. ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணி பாதி முடிந்தது. ஆனால் மீதம் உள்ள பகுதிகளில் கட்டுமான பணிகள் கடந்த ஒரு மாதமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது மீண்டும் பணிகள் தொடங்கினால் ஆற்றில் தண்ணீர் திறப்பை நிறுத்த வேண்டும். இதனால் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்போக நெல் சாகுபடிக்கு முல்லைப்பெரியாற்றில் தண்ணீர் திறப்பதில் சிக்கல் ்ஏற்படும் சூழ்நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையில் இருந்து வரும் தண்ணீர் மூலம் தேனி மாவட்டத்தில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதியில் 14 ஆயிரத்து 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெல் சாகுபடி செய்யப்படுகிறது. இதற்காக ஆண்டுதோறும் அணையில் இருந்து ஜூன் மாதம் முதல் வாரத்தில் தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். இந்நிலையில் மதுரை கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கூடலூர் வண்ணான் துறை பகுதியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டும் பணிகள் கடந்த 12 மாதங்காளக ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. தற்போது பணிகள் நடைபெறாமல் நிறுத்திவைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில் கம்பம் பள்ளத்தாக்கு பகுதிகளில் விவசாய பணிகளுக்கு வரும் ஜூன் மாதம் தண்ணீர் திறந்து விடும்போது, தடுப்பணையின் மீதி பணிகளுக்காக ஆற்றில் தண்ணீரை நிறுத்தினால் விவசாய பணிகளுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் மற்றும் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பாதியில் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ள தடுப்பணை கட்டும் பணியை முதல் போக நெல் பாசனத்திற்கு பிறகு தொடங்க வேண்டும் என்றனர்.

மேலும் செய்திகள்