புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் மும்மதத்தினர் கூட்டு பிரார்த்தனை
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழாவில் மும்மதத்தினர் கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது.
கோவில்பட்டி:
கோவில்பட்டி புனித சூசையப்பர் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந்் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் திருப்பலி, இறை கலைநிகழ்ச்சிகளுடன் நடந்தது. 9-ம் திருநாளான நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு ஆலயத்தில் பாளை. மறை மாவட்ட முதன்மை குரு குழந்தைராஜ் அடிகளார், திட்ட அலுவலர் தீபக் மைக்கேல் ராஜா அடிகளார், திருத்தல பங்குத்தந்தை அலோசியஸ் துரைராஜ் அடிகளார், உதவி பங்குத்தந்தை மிகேல் மகேஷ் இணைந்து திருப்பலி நிறைவேற்றினார்கள்.
பின்னர் திருச்சபை ஐக்கிய பாஸ்டர்கள், போதகர்கள், இந்து சமய சகோதரர்கள், பெரிய பள்ளிவாசல் அஸ்ரத் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக அழைக்கப் பட்டிருந்தனர். மும்மதத்தினரும் இணைந்து கூட்டு பிரார்த்தனை செய்தனர். பின்னர் திருத்தலத்தில் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சூசையப்பர், இறை மகன் இயேசுவின் சொரூபம் வைக்கப்பட்ட பவனியை மும்மதத்தினரும் இணைந்து தொடங்கி வைத்தனர். பவனியில் ஏராளமான அருட் சகோதரிகள், இறை மக்கள் ஜெபம் செய்தவாறு மெயின் ரோடு, மார்க்கெட் ரோடு, மாதாங் கோவில் ரோடு, எட்டயபுரம் ரோடு, புதுரோடு, சாத்தூர் ரோடு வழியாக ஆலயம் வந்து சேர்ந்தது.