ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு ஆர்ப்பாட்டம்
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வலியுறுத்தி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
எண்ணும் எழுத்தும் திட்டத்தை கைவிட வேண்டும். இத்திட்டத்தில் மூன்றாம் தரப்பு மதிப்பீடு மற்றும் ஆய்வினை கைவிட வேண்டும். விடுமுறை நாட்களில் ஆசிரியர்களுக்கு பயிற்சி வகுப்புகளை நடத்தக்கூடாது என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடலூரில் தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொது செயலாளர் ஜெகநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் சிற்றரசன், தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்ட பொருளாளர் சங்கரநாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில செயலாளர் கிறிஸ்டோபர் கோரிக்கைகளை வலியுறுத்தி சிறப்புரையாற்றினார். இதில் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு கண்டன கோஷங்கள் எழுப்பினர். முடிவில் மாவட்ட துணை தலைவர் வெங்கடாசலம் நன்றி கூறினார்.