கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரிப்பு; நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் தகவல்

கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறினார்.

Update: 2022-08-25 19:58 GMT

கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்துள்ளது என்று அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறினார்.

வனத்துறை விழிப்புணர்வு

தமிழ்நாடு அரசு வனத்துறை களக்காடு -முண்டந்துறை புலிகள் காப்பகம் சூழல் மேம்பாட்டு கோட்டம் சார்பில் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் அயல் நாட்டு வேலை வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வு மற்றும் சூழல் இளையோர் விளையாட்டு மன்றம் தொடங்குதல் மற்றும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. கலெக்டர் விஷ்ணு தலைமை தாங்கினார். அரும்புகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குனர் ராஜ.மதிவாணன் வரவேற்றார். களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை வன பாதுகாவலர் அன்பு முன்னிலை வகித்தார். தமிழக அரசு நிறுவனமான அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மகேசுவரன், வெளிநாட்டு வேலைவாய்ப்புகள் குறித்து பேசினார். இதில் நெல்லை மாவட்டத்தை சேர்ந்த மலையோர கிராம மக்கள், வன குழுவினர் கலந்து கொண்டனர். சூழல் இளையோர் விளையாட்டு மன்றங்களை சேர்ந்தவர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை நிர்வாக இயக்குனர் மகேஸ்வரன் வழங்கினார். இதில் அறக்கட்டளை இயக்குனர் லதா மதிவாணன் பேசினார். திருக்குறுங்குடி சூழல் வனச்சரகர் யோகேசுவரன் நன்றி கூறினார்.கூட்டத்துக்கு பிறகு அயல் நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன நிர்வாக இயக்குனர் மகேசுவரன் கூறியதாவது:-

கொரோனாவுக்கு பிறகு

கொரோனாவுக்கு பின்னர் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு அதிகரித்துள்ளது. வெளிநாட்டுக்கு வேலைக்கு செல்ல விரும்புவர்கள் www.omcmanpower.com என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். தற்போது எங்கள் நிறுவனம் மூலம் துபாயில் வீட்டு வேலை செய்ய 500 பேர், குவைத்தில் செவிலியர்கள் 500 பேர் வேலைக்கு எடுக்க ஒப்பந்தம் எடுக்கப்பட்டு வேலைக்கு ஆள் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. கொரோனாவுக்கு பிறகு வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு அதிகரித்திருப்பதால் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். ஆங்கிலம் பேசக்கூடிய அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் வேலை செய்ய வேண்டுமென்றால் அவர்களின் மொழி உச்சரிப்புக்கு ஏற்ப மொழி திறன் பெற்றிருக்க வேண்டும். வேலைக்கு செல்வோர் அந்தந்த நாடுகள் மூலம் வைக்கப்படும் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மொழித்திறன் பயிற்சி

எனவே திருச்சி, சென்னை, மதுரை, நாமக்கல் உள்ளிட்ட இடங்களில் செவிலியர் கல்லூரிகளில் இதற்காக சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசு ரூ.87 லட்சம் நிதி கொடுத்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்