நல்லம்பள்ளியில் வருகிற 21-ந் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்-கலெக்டர் சாந்தி தகவல்

Update: 2023-01-04 18:45 GMT

தர்மபுரி:

தர்மபுரி மாவட்ட நிர்வாகம் சார்பில் 40 ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நல்லம்பள்ளியில் நடக்கிறது என்று கலெக்டர் சாந்தி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

தர்மபுரி மாவட்ட நிர்வாகம், மாவட்ட வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் ஆகியவற்றின் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகிற 21-ந் தேதி நல்லம்பள்ளி விஜய் வித்யாலயா பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற உள்ளது. தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்கள் பயன்பெறும் வகையில் நடத்தப்படும் இந்த முகாமை வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தொடங்கி வைக்கிறார்.

இந்த முகாமில் உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், ஜவுளி, வங்கி சேவைகள், காப்பீடு, மருத்துவம், கட்டுமானம் உள்ளிட்ட முக்கிய துறைகளில் இருந்து 300-க்கும் மேற்பட்ட முன்னணி வேலை அளிக்கும் நிறுவனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு, 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட காலி பணியிடங்களுக்கு பணியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.

இணையதளத்தில் பதிவு

21-ந் தேதி காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் 8-ம் வகுப்பு, 10-ம் வகுப்பு, பிளஸ்-2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, பட்டப்படிப்பு, பொறியியல் படிப்பு, செவிலியர், ஆசிரியர், தொழிற்கல்வி படித்தவர்கள் உள்ளிட்ட அனைத்து விதமான கல்வி தகுதி உள்ளவர்களும் கலந்து கொள்ளலாம்.

இந்த தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள வேலை அளிக்கும் நிறுவனங்களும், வேலை தேடுவோரும் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது தொடர்பாக மேலும் விவரங்கள் பெற dpijobfair2023@gmail.com என்ற மின்னஞ்சல் வாயிலாகவும், 04342-296188 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் இந்த முகாமில் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்