கட்டிட தொழிலாளி மகளின் திருமணத்திற்காக வைத்திருந்த நகைகள், பணம் திருட்டு
ஆவூர் அருகே கட்டிட தொழிலாளியின் மகளின் திருமணத்திற்கு வாங்கி வைத்திருந்த நகைகள், பணத்தை திருடி சென்ற மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
கட்டிட தொழிலாளி
விராலிமலை தாலுகா, ஆம்பூர்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் வேளாங்கண்ணி (வயது 45), கட்டிட தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். இந்தநிலையில் வேளாங்கண்ணியின் மூத்த மகளுக்கு திருமணம் செய்வதற்காக 11 பவுன் நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வழக்கம்போல் வேளாங்கண்ணி மற்றும் அவரது மனைவி வேலைக்கு சென்று விட்டனர். அவரது மகன் மற்றும் மகள்கள் வயலுக்கு சென்று விட்டு மாலை 6 மணியளவில் வீட்டிற்கு சென்றுள்ளனர். அப்போது பீரோவில் வைத்திருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 11 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.10 ஆயிரத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது.
போலீசார் விசாரணை
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த மாத்தூர் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் செவ்வந்தி உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். அப்போது வீட்டின் பூட்டு, கதவை உடைக்காமல் வீட்டு மேலே இருந்த ஓட்டை பிரித்துக் கொண்டு உள்ளே இறங்கிய மர்ம ஆசாமிகள் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு பீரோவில் பதிவான கைரேகைகளை பதிவு செய்தனர். இந்த சம்பவம் குறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பட்டப்பகலில் வீட்டின் ஓட்டை பிரித்து கொண்டு உள்ளே நுழைந்து பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.