ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு
தர்மபுரி அருகே ஓய்வு பெற்ற அரசு ஊழியர் வீட்டில் நகை திருட்டு போனது.
தர்மபுரியை அடுத்த ஏ.கொல்லஅள்ளி பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 70). கூட்டுறவுத்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர். இவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்தினருடன் திருவண்ணாமலையில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்றார். பின்னர் அவர் வீட்டுக்கு வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது 2 பீரோக்கள் உடைக்கப்பட்டு துணி, மணிகள் உள்ளிட்ட பொருட்கள் சிதறி கிடந்தன. மேலும் பீரோவில் வைத்திருந்த ஒரு பவுன் நகை, வெள்ளி பொருட்கள் திருட்டு போனது தெரியவந்தது. இதுகுறித்து அவர் தர்மபுரி டவுன் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.