உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 பவுன் நகைகள் கொள்ளை மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
உளுந்தூர்பேட்டை அருகே தலைமை ஆசிரியர் வீட்டில் 36 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
உளுந்தூர்பேட்டை,
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கெடிலம் பகுதியை சேர்ந்தவர் பவுல்ராஜ் (வயது 53). பெரியபட்டு அரசு பள்ளியில் தலைமை ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர், நேற்று காலை வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூர் சென்றார். பின்னர் மாலை அவர் குடும்பத்துடன் வீடு திரும்பியபோது, வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 36 பவுன் நகைகள், ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை காணவில்லை. பவுல்ராஜ் குடும்பத்துடன் வெளியூர் சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள், பட்டப்பகலில் வீட்டின் கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகை, பணத்தை கொள்ளையடித்துச் சென்றிருப்பது தெரியவந்தது. இது பற்றி தகவல் அறிந்ததும் திருநாவலூர் போலீசார், கொள்ளை நடந்த வீட்டிற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொள்ளையில் ஈடுபட்ட மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.