ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை
பர்கூரில் ஐ.டி. நிறுவன ஊழியர் வீட்டில் 25 பவுன் நகைகள் கொள்ளை போனது. பின்பக்க கதவை உடைத்து மர்மநபர்கள் கைவரிசை காட்டியுள்ளனர். இந்த துணிகர சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
பர்கூர்
25 பவுன் நகை கொள்ளை
கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் வாணியம்பாடி ரோடு எண்டுசெட்டி தெருவை சேர்ந்தவர் பரிமளா (வயது 57), இவருடைய மகன் தாமரைசெல்வன். சென்னையில் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். விடுமுறையில் ஊருக்கு வந்த அவர், நேற்று முன்தினம் சென்னைக்கு சென்றார். வீட்டில் பரிமளா மட்டும் தனியாக இருந்தார். வீட்டின் பின்பக்கம் உள்ள விவசாயநிலம் வழியாக வந்த மர்மநபர்கள், வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். வீட்டில் இருந்த 25 பவுன் நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.
போலீஸ் தேடுகிறது
காலையில் தூங்கி எழுந்த பரிமளா, வீட்டில் நகைகள் கொள்ளை போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். தகவல் அறிந்த பர்கூர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதுகுறித்த புகாரின் பேரில் பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.