கல்லூரி மாணவர்களை தாக்கி நகை-பணம், செல்போன் கொள்ளை

கல்லூரி மாணவர்களை தாக்கி நகை-பணம், செல்போன் கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2022-06-11 20:42 GMT

திருச்சி:

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

கல்லூரி மாணவர்கள்

திருச்சி மார்சிங்பேட்டையை சேர்ந்தவர் மூர்த்தி. இவர் திருச்சி மாநகர போலீஸ் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வருகிறார். இவருடைய மகன் மல்லேஸ்வரன்(வயது 21). இவர் திருச்சி- திண்டுக்கல் சாலையில் உள்ள ஒரு கல்லூரியில் எம்.எஸ்சி. முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவருடன் படிக்கும் சண்முகவடிவேல், ஆசாத்பாரதி ஆகியோர் எடமலைப்பட்டிபுதூர் பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.

மல்லேஸ்வரன் தனது நண்பர்களை தினமும் மோட்டார் சைக்கிளில் கல்லூரியில் இருந்து அழைத்துச்சென்று அறையில் விடுவது வழக்கம். அதன்படி சம்பவத்தன்று மாலை தனது நண்பர்களை விடுவதற்காக, அவர்களை அழைத்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

நகை, பணம் பறிப்பு

கருமண்டபம் மாந்தோப்பு பகுதியில் சென்றபோது 4 பேர் கும்பல் அவர்களை வழிமறித்து, தாக்கியது. அத்துடன் அவர்கள் அணிந்திருந்த 1¼ பவுன் தங்க சங்கிலி, 3 செல்போன்கள், ரூ.1,900 ஆகியவற்றை பறித்துச்சென்றனர். இதில் படுகாயம் அடைந்த மாணவர்களை அந்தவழியாக வந்தவர்கள் மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து அவர்கள் கண்டோன்மெண்ட் போலீசில் புகார் செய்தனர்.

அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், மாணவர்களை தாக்கி வழிப்பறி செய்தது, திருச்சி எடமலைப்பட்டிபுதூர் கொல்லன்குளம் பகுதியை சேர்ந்த அபுதாஹீர் (34) மற்றும் அவரது நண்பர்கள் அருண், பாபு, குட்டை முத்து என்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து 4 பேர் மீதும் போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரையும் தேடி வருகிறார். இதில் ரவுடியான அபுதாஹீர் கொலை, வழிப்பறி, அடிதடி வழக்குகளில் தொடர்புடையவர் என்று போலீசார் கூறினார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்