சேலம்
சேலத்தில் அழகுநிலையத்தில் 24 பவுன் நகை மாயமானது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
24 பவுன் நகை மாயம்
சேலம் அம்மாபேட்டை குமரன் நகரை சேர்ந்தவர் கவிதா (வயது 41). இவர் பட்டை கோவில் அருகே உள்ள சேர்மன் ராமலிங்கம் தெருவில் அழகு நிலையம் நடத்தி வருகிறார்.
கவிதா வீட்டில் நகைகளை வைத்தால் பாதுகாப்பு இல்லை என கருதி தனக்கு சொந்தமான 41 பவுன் நகையை அழகுநிலையத்தில் உள்ள பீரோவில் வைத்துள்ளார்.
மேலும் நகை பாதுகாப்பாக இருக்கிறதா? என அவர் அடிக்கடி சரிபார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவர் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகையை பார்த்தார். அப்போது அதில் 24 பவுன் மட்டும் நகை காணாததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். மீதமுள்ள நகை பீரோவில் இருந்ததாக கூறப்படுகிறது.
போலீசில் புகார்
பின்னர் நகை மாயமானது குறித்து கவிதா நேற்று அம்மாபேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரின் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.
மேலும் இந்த நகையை மர்ம நபர்கள் திருடி சென்றார்களா?, அல்லது நகை எப்படி மாயமானது? என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.