ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டில் ரூ.9 லட்சம், நகை திருட்டு
பழனியில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.9 லட்சம் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
பழனியில், ரியல் எஸ்டேட் அதிபர் வீட்டின் பூட்டை உடைத்து, ரூ.9 லட்சம் மற்றும் 9 பவுன் நகையை மர்ம நபர்கள் திருடி சென்றனர்.
ரியல் எஸ்டேட் அதிபர்
திண்டுக்கல் மாவட்டம் பழனி நேதாஜிநகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 50). ரியல் எஸ்டேட் அதிபர். அவருடைய மனைவி ராதாமணி (43). நேற்று முன்தினம் செல்வராஜ், தனது மனைவியுடன் கோவையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டார்.
இதனை நோட்டமிட்ட மர்ம நபர்கள், நள்ளிரவில் வீட்டுக்கு வந்து, கதவை உடைத்து உள்ளே புகுந்தனர். பின்னர் பீரோவை உடைத்து, அதில் இருந்த 9 பவுன் நகை, ரூ.9 லட்சம் ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.
இந்தநிலையில் நேற்று காலை செல்வராஜின் வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக செல்வராஜூக்கு போனில் தகவல் தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணை
இதேபோல் பழனி டவுன் போலீஸ் நிலையத்துக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி, இன்ஸ்பெக்டர் உதயக்குமார் ஆகியோர் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
இதேபோல் திண்டுக்கல்லில் இருந்து தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு வீட்டில் பதிவாகி இருந்த தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மேலும் இந்த திருட்டு சம்பவம் குறித்து பழனி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
பொதுமக்கள் பீதி
பழனி புறநகர் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, கடந்த சில தினங்களாக திருட்டு அரங்கேறி வருகிறது. இதனை தடுக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.
பழனி நேதாஜிநகரில் உள்ள பெரும்பாலான தெருக்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் நேதாஜிநகர், திருநகர் பகுதியில் தான் கடந்த சில மாதங்களாக தொடர் திருட்டு நடந்து வருவது பொதுமக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. எனவே பழனி நகர் பகுதியில் கூடுதல் போலீசாரை ரோந்து பணியில் ஈடுபடுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.