ஓடும் பஸ்களில் அதிகரிக்கும் நகை திருட்டு

ஓடும் பஸ்களில் அதிகரிக்கும் நகை திருட்டு அதிகரித்து வருகிறது.

Update: 2023-08-20 19:08 GMT

கடந்த காலங்களில் திருட்டு என்பது வீடுகளிலும், வணிக நிறுவனங்களிலும் நடைபெற்று வந்தது. ஆனால் கால மாற்றத்தில் இந்த நிலை மாறி பஸ் நிலையங்களிலும், ெரயில் நிலையங்களிலும், ஓடும் பஸ்களிலும் திருட்டு சம்பவங்கள் நிகழக்கூடிய நிலை ஏற்பட்டு விட்டது.

நகை பறிப்பு

இதுதவிர நடந்து செல்லும் பெண்களிடம் இருசக்கர வாகனங்களில் வந்து நகை பறிக்கும் சம்பவங்களும், வீடு புகுந்து நகை மற்றும் பணம் திருடும் சம்பவங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. வீடு புகுந்து நகைகளை கொள்ளையடித்து செல்லும் சம்பவங்களில் தடய அறிவியல் நிபுணர்கள் கைவிரல் ரேகைகளை பதிவு செய்து அதன் அடிப்படையிலும், திருட்டு சம்பவங்கள் நடந்துள்ள வழிமுறையின் அடிப்படையிலும் போலீசார் துப்பு துலக்குகின்றனர் ஆனால் பஸ் நிலையங்களிலும், ஓடும் பஸ்களிலும் நடைபெறும் நகை பறிப்பு சம்பவங்கள் மற்றும் திருட்டு சம்பவங்களில் துப்பு துலக்குவது என்பது சற்று சிரமமான காரியம்தான்.

கண்காணிப்பு குறைபாடு

விருதுநகர் மாவட்டத்தில் சமீபகாலமாக ஓடும் பஸ்களில் பெண்கள், பஸ்களில் ஏறும் மூதாட்டிகளுக்கு பஸ்சில் ஏற உதவி செய்வது போன்று நடித்து அவர்களிடம் நகைகளை திருடும் சம்பவமும், கூட்ட நெரிசல் மிகுந்த பஸ்களில் நின்று கொண்டு செல்லும் பெண்களின் பின்னால் நின்று அந்த பெண்களிடம் நகைகளை திருடி செல்லும் சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

மேலும் பஸ் நிலையங்களில் கண்காணிப்பு குறைபாடு காரணமாக திருட்டு சம்பவங்கள் நடைபெறுவதாக புகார் கூறப்பட்டாலும் பொதுமக்களும் தங்களது உடைமைகளை பாதுகாப்பாக வைத்துக் கொள்ள தவறுவதும் முக்கிய காரணமாகும். எது எப்படியாயினும் திருட்டு போன நகைகளை மீட்க வேண்டியது போலீசாரின் கடமை என்ற நிலையில் அதற்கான நடவடிக்கை எடுத்தாக வேண்டும் என்பதே நிதர்சன உண்மை.

இதுபற்றி பெண்கள் கூறியதாவது:-

அதிர்ச்சி

விருதுநகரை சேர்ந்த சமூக ஆர்வலர் ராஜலட்சுமி:-

ஓடும் பஸ்சிலும், பஸ்நிலையங்களிலும் பெண்களிடம் பெண்களே நகைகளை திருடி செல்லும் சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது.

பொதுவாக பெண்கள் வெளியூர் செல்லும் பொழுது நகைகள் அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும். சில பெண்கள் ஓடும் பஸ்களில் பெண்களிடமும், மூதாட்டிகளிடமும் நகைகளை திருடி செல்லும் சம்பவம் அதிகரித்து வருகிறது. எனவே போலீசார் பஸ் நிலையங்களை கண்காணித்து நகைகளை திருடும் பெண்களை கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பஸ் மற்றும் ரெயில் நிலையங்களில் திருட்டு சம்பவங்களை தவிர்க்க கண்காணிப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்த வேண்டும். போலீசார் புறக்காவல் நிலையங்களுக்குள்ளே முடங்கியிருப்பதை தவிர்த்து பஸ் நிலையத்திற்குள் ரோந்து பணியில் ஈடுபட வேண்டும்.

கண்காணிப்பு கேமரா

லட்சுமி:-

மாவட்டத்தில் பஸ் நிலையங்களில் அதிகரித்து வரும் திருட்டு சம்பவங்களை தடுக்கவும் நடந்த திருட்டு சம்பவங்களில் விரைந்து துப்புதுலக்கி பொருட்களை மீட்கவும் மாவட்ட போலீஸ் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதற்கு முக்கியமாக மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கண்காணிப்பு கேமராக்களை அதிகப்படுத்த வேண்டும். அதே நேரத்தில் திருவிழா காலங்களில் கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்த கூடுதல் போலீசாரை நியமிக்க வேண்டும்.

பயணிகள் அச்சம்

பாளையம்பட்டி பாண்டிச்செல்வி:-

ஓடும் பஸ்களில் தற்போது திருட்டு சம்பவம் அதிகரித்து வருகிறது. கைக்குழந்தையுடன் வரும் பெண்கள் சிலர் அருகில் அமர்ந்திருக்கும் நபர்களை ஏமாற்றி கீழே பணம் கிடைப்பதாக பொய் கூறி ஏதோ ஒரு விதமாக மயக்கி அவர்கள் வைத்திருக்கும் பணத்தை திருடுவதாக செய்திகள் வருகின்றன.

இதனால் பஸ்களில் பயணம் செய்வது அச்சமாக உள்ளது. அனைத்து பஸ்களிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும்.

விழிப்புணர்வு

அருப்புக்கோட்டையை சேர்ந்த லட்சுமி:-

பஸ்களில் பயணம் செய்யும் பெண்களின் கழுத்தில் அணிந்திருக்கும் நகைகளை திருடும் சம்பவம் அதிகரித்து வருகிறது.

இதனால் நகை அணிந்து கொண்டு பஸ்களில் செல்வதற்கு அச்சமாக உள்ளது. வெளியூர் செல்லும் போது பஸ்களில் முடிந்த அளவு குறைவான நகைகள் அணிந்து செல்ல வேண்டும். மேலும் பயணம் செய்யும்போது அருகில் உள்ள நபர்களை கண்காணித்து விழிப்புணர்வுடன் பயணம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தனிப்படை அமைப்பு

போலீஸ் சூப்பிரண்டு சீனிவாச பெருமாள்:-

பஸ்நிலையங்களிலும், ஓடும் பஸ்களிலும் நகை திருடும் சம்பவங்களில் துப்புதுலக்க தனிப்படை அமைத்து நடவடிக்கை எடுத்ததின் பேரில் விருதுநகர் பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் நகை திருடிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து அனைத்து பஸ்நிலையங்களிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஓடும் பஸ்களில் பயணம் செய்யும் பெண்கள் மற்றும் பஸ் நிலையங்களில் தங்கள் உடமைகளையும், நகைகளையும் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். பஸ் நிலையங்களில் சந்தேகப்படும் நபர் குறித்து அங்குள்ள புறக்காவல் நிலையங்களில் புகார் தெரிவிக்கலாம். மாவட்டம் முழுவதும் திருட்டு சம்பவங்களில் துப்புதுலக்கி பொருட்களை மீட்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்