குற்றாலம் அருவியில் குளித்த பெண்ணிடம் நகை பறிப்பு; 4 பெண்கள் கைது

குற்றாலம் அருவியில் குளித்த பெண்ணிடம் நகை பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-07-24 17:14 GMT

குற்றாலம் அருவியில் குளித்த பெண்ணிடம் நகை பறித்த 4 பெண்களை போலீசார் கைது செய்தனர்.

அருவியில் குளித்தபோது...

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. அங்குள்ள அருவிகளில் ஆர்ப்பரித்து கொட்டும் தண்ணீரில் தினமும் பல ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் குளித்து மகிழ்கின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்த முருகேசுவரி என்பவர் நேற்று முன்தினம் பழைய குற்றாலம் அருவியில் குளித்தபோது, அவரது 3½ பவுன் தங்க சங்கிலி திடீரென்று மாயமானது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், இதுகுறித்து குற்றாலம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

4 பெண்கள் கைது

இதுதொடர்பாக குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் அலெக்ஸ் ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். பழைய குற்றாலம் அருவிக்கரையில் உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதில் சந்தேகப்படும்படியான 4 பெண்களை பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் மதுரையைச் சேர்ந்த லதா (வயது 33), சுமித்ரா (29), ரத்னா (30), லட்சுமி (35) என்பதும், பழைய குற்றாலம் அருவியில் முருகேசுவரி குளித்தபோது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது தங்க சங்கிலியை பறித்ததும் தெரிய வந்தது. இதையடுத்து அவர்கள் 4 பேரையும் போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த தங்க சங்கிலியை மீட்டனர்.

குற்றாலம் அருவிகளில் சுற்றுலா பயணிகள் விலை உயர்ந்த நகைகளை அணிந்து குளிக்க வேண்டாம் என்றும், பெண்கள் தங்களது நகைகளை கையில் பிடித்து கொண்டு குளிக்குமாறும் போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்