ஓடும் பஸ்சில் 4 பெண்களிடம் நகை திருட்டு

தர்மபுரியில் ஓடும் பஸ்சில் 4 பெண்களிடம் நகை திருடப்பட்டது. பயணியாக நடித்து கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-07-08 17:01 GMT

தர்மபுரியில் ஓடும் பஸ்சில் 4 பெண்களிடம் நகை திருடப்பட்டது. பயணியாக நடித்து கைவரிசை காட்டிய கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

ஓடும் பஸ்சில் திருட்டு

தர்மபுரி மாவட்டம் மிட்டாரெட்டி அள்ளி பகுதியைச் சேர்ந்தவர் சங்கீதா. இவர் தர்மபுரிக்கு பஸ்சில் வந்த போது, ஒரு பையில் 2 பவுன் தங்க நகை வைத்திருந்தார். தர்மபுரி பஸ் நிலையத்தில் இறங்கி பார்த்த போது பையில் இருந்த நகை மாயமாகி இருந்தது.

இதேபோல் பாப்பிரெட்டிப்பட்டி காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரியங்கா (வயது 30) என்பவரும் தர்மபுரிக்கு பஸ்சில் வந்த போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி மர்மநபர்கள் பிரியங்கா வைத்திருந்த பையில் இருந்து 2 பவுன் நகையை திருடினர்.

போலீசில் புகார்

நாகர்கூடல் பகுதியைச் சேர்ந்த சிவரஞ்சனி என்பவரும் தர்மபுரிக்கு பஸ்சில் வந்த போது அவர் பையில் இருந்த தங்க நகை, வெள்ளி கொலுசு திருட்டு போனது. இதுகுறித்து 3 பேரும் தனித்தனியாக தர்மபுரி டவுன் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை திருட்டில் ஈடுபட்ட நபர்கள் குறித்து விசாரணை நடத்தினர்.

இதேபோல் நல்லம்பள்ளி அருகே ஏலகிரியான்கொட்டாய் கிராமத்தை சேர்ந்தவர் பவுனு (46) என்ற பெண்ணும் தர்மபுரிக்கு சென்று விட்டு ஊர் திரும்பிய போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4 பவுன் தங்க சங்கிலியை மர்மநபர் பறித்து சென்றார். இதுகுறித்து பவுனு கொடுத்த புகாரின் பேரில் அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

கொள்ளை கும்பல்

தர்மபுரியில் ஓடும் பஸ்சில் நகை திருட்டு நடக்கும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. இந்த துணிகர திருட்டில் ஒரு நபர் ஈடுபட வாய்ப்பு இல்லை என்றும், கும்பலாக மர்மநபர்கள் கைவரிசையில் ஈடுபட்டு இருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கிறார்கள். இந்த கொள்ளை கும்பலை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.

இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் பஸ்சில் பயணிக்கும் மக்கள் அச்சம் அடைந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்