சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களிடம் நகை பறிப்பு வில்லுக்குறி பகுதியில் மர்ம ஆசாமிகள் கைவரிசை

வில்லுக்குறி பகுதியில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

Update: 2023-02-18 21:27 GMT

திங்கள்சந்தை:

வில்லுக்குறி பகுதியில் சிவாலய ஓட்டத்தில் பங்கேற்ற 2 பெண் பக்தர்களிடம் நகை பறித்த மர்ம ஆசாமிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

சிவாலய ஓட்டம்

சிவராத்திரியையொட்டி குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற 12 சிவாலயங்களுக்கு பக்தர்கள் ஓடியும், நடந்தும் சென்று சாமி தரிசனம் செய்வார்கள். அதன்படி நேற்று முன்தினம் மாலையில் தொடங்கிய சிவாலய ஓட்டம் நேற்றும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

இந்த நிலையில் நாகர்கோவில் அருகே உள்ள பெரும் செல்வவிளை பகுதியை சேர்ந்த கோலப்பன் என்பவரது மனைவி ராதா (வயது 64) சிவாலய ஓட்டத்தில் கலந்து கொண்டு திருவிடைக்கோடு சடையப்பர் கோவிலுக்கு சாமி கும்பிட சென்றார். அப்போது வழியில் வில்லுக்குறி பாலம் அருகே இருந்த விநாயகர் கோவிலுக்கு சென்று சாமி கும்பிட்டார்.

2 பெண்களிடம் சங்கிலி பறிப்பு

அதன்பிறகு அவர் அங்கிருந்து வெளியே வந்து பார்த்த போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 5 பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. இதனால் பதறிப்போன அவர் கூச்சல் போட்டார். அப்போது தான் கூட்ட நெரிசலை பயன்படுத்தி ராதாவின் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை யாரோ மர்ம ஆசாமி பறித்தது தெரியவந்தது.

இதே போல் மற்றொரு பெண்ணிடமும் தங்க சங்கிலி பறிக்கப்பட்டது. அவர் சுங்கான் கடை அருகே உள்ள பரசேரி பகுதியை சேர்ந்த செல்லப்பன் பிள்ளை மனைவி ஜெயா (64) ஆவார். இவரும் அதே விநாயகர் கோவிலில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த போது கூட்ட நெரிசலில் அவர் கழுத்தில் அணிந்து இருந்த 7 பவுன் தங்கச்சங்கிலியையும் யாரோ மர்ம ஆசாமி பறித்து சென்று விட்டார்.

இந்த இரு சம்பவம் குறித்தும் இரணியல் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைவரிசை காட்டிய மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்