பட்டாசு ஆலை மேலாளர் வீட்டில் நகை கொள்ளை

ஆடிப்பிறப்புக்கு மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த பட்டாசு ஆலை மேலாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

Update: 2023-07-19 20:18 GMT

தாயில்பட்டி,


ஆடிப்பிறப்புக்கு மாமனார் வீட்டிற்கு சென்றிருந்த பட்டாசு ஆலை மேலாளர் வீட்டின் ஜன்னலை உடைத்து மர்மநபர்கள் நகையை கொள்ளையடித்து சென்றனர்.

ஆலை மேலாளர்

வெம்பக்கோட்டை அருகே உள்ள விஜயகரிசல்குளம் ஊராட்சி நேருஜி நகரை சேர்ந்தவர் கருப்பசாமி (வயது 30). இவர் குண்டாயிருப்பில் உள்ள பட்டாசு ஆலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சமீபத்தில் தான் திருமணம் ஆனது.

ஆதலால் தலை ஆடிக்காக மனைவியுடன் ஆடிப்பிறப்பன்று வெம்பக்கோட்டையில் உள்ள மாமனார் பாலகிருஷ்ணன் வீட்டுக்கு சென்று விட்டார். இதையடுத்து மறுநாள் வீட்டிற்கு வந்தார். அப்போது வீட்டின் படுக்கை அறை ஜன்னல் உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

நகை, பணம் கொள்ளை

வீட்டிற்குள் சென்று பார்த்த போது வீட்டில் பீரோ உடைந்து பொருட்கள் சிதறிக்கிடந்தது. மேலும் பீரோவுக்குள் இருந்து 8 பவுன் நகை, ரூ. 20 ஆயிரம் ஆகியவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இதுகுறித்து அவர் வெம்பக்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நம்பிராஜன், சப்-இன்ஸ்பெக்டர் வெற்றிமுருகன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவ இடத்திற்கு மோப்ப நாய், கைரேகை நிபுணர்களும், வரவழைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்