விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் நகை திருட்டு மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு

விழுப்புரம் அருகே தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் ரூ.7 லட்சம் மதிப்புள்ள நகையை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Update: 2022-08-26 14:22 GMT

வளவனூர், 

தனியார் நிறுவன ஊழியர்

விழுப்புரத்தை அடுத்த வளவனூர் அருகே உள்ள சொர்ணாவூர் மேல்பாதி கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் ராஜ்குமார் (வயது 30). இவர் புதுச்சேரியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார்.

இவர் தனது உறவினர் ஒருவருடைய துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக கடந்த 10-ந் தேதியன்று தனது குடும்பத்தினருடன் சென்னைக்கு சென்றார். வீட்டில் ராஜ்குமாரின் தாய் மட்டும் இருந்துள்ளார்.

நகை திருட்டு

இந்நிலையில் ராஜ்குமார் சென்னையில் இருந்து நேற்று முன்தினம் இரவு சொர்ணாவூர் மேல்பாதிக்கு வந்தார். அப்போது அவர் தனது அறையில் இருந்த பீரோவை திறந்து பார்த்தபோது அதில் வைத்திருந்த 19 பவுன் நகையை காணாதது கண்டு அதிர்ச்சியடைந்தார். ராஜ்குமாரின் தாய் வெளியில் சென்றிருக்கும் சமயத்தில் யாரேனும் மர்ம நபர்கள், வீட்டிற்குள் புகுந்து பீரோவில் இருந்த நகையை திருடிச்சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.7 லட்சமாகும்.

இதுகுறித்து ராஜ்குமார், வளவனூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருவதோடு மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்