திண்டிவனத்தில் துணிகரம்: ஆசிரியர் தம்பதி வீட்டில் 40 பவுன் நகை கொள்ளை பட்டப்பகலில் கொள்ளையர்கள் கைவரிசை
திண்டிவனத்தில் ஆசிரியர் தம்பதி வீட்டில் 40 பவுன் நகையை கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திண்டிவனம்,
திண்டிவனம் பெலாக்குப்பம் ரோட்டில் சாய் லட்சுமி நகரில் வசித்து வருபவர் சசிவிகுமார் (வயது 47). இவரது மனைவி லதா (40). இதில், சசிவிகுமார் கருவம்பாக்கம் அரசு மேல்நிலை பள்ளியிலும், லதா விழுக்கம் கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியிலும் ஆசிரியர்களாக பணிபுரிந்து வருகிறார்கள்.
நேற்று வழக்கம் போல் இருவரும் வீட்டை பூட்டிவிட்டு பள்ளிக்கு சென்றுவிட்டனர். பள்ளி நேரம் முடிந்த பின், மாலை 5 மணிக்கு லதா தனது வீட்டுக்கு வந்தார். அப்போது கதவு பூட்டுகள் உடைக்கப்பட்டு கிடந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர், உள்ளே சென்று பார்த்தார். அங்கிருந்த பொருட்கள் அனைத்தும் சிதறி கிடந்தன.
40 பவுன் கொள்ளை
மேலும் பீரோ உடைக்கப்பட்டு, அதில் இருந்த 40 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் கொள்ளை போயிருந்தது. கொள்ளை போன 40 பவுன் நகையில், வங்கியில் அடகு வைத்திருந்த 12 பவுன் நகையை நேற்று முன்தினம் தான், சசிவிகுமார் திருப்பி கொண்டு வந்து, வீட்டில் வைத்திருந்தார். மொத்த நகைகளையும் வங்கியில் உள்ள லாக்கரில் வைக்க முடிவு செய்து இருந்தார். அதற்குள் இந்த கொள்ளை சம்பவம் அறங்கேறிவிட்டது.
இதுபற்றி அறிந்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சீனிபாபு, புகழேந்தி மற்றும் போலீசார் நேரில் சென்று பார்வையிட்டு, விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, வீட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவுக்கான வயர்களை துண்டித்தும், வீடியோ பதிவாகி இருந்த ஹார்டுடிஸ்கை கொள்ளையர்கள் திருடி சென்று இருப்பதும் தெரியவந்தது.
வலைவீச்சு
தொடர்ந்து கைரேகை நிபுணர் கூடுதல் கண்காணிப்பாளர் சோமசுந்தரம் நேரில் வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தார். மேலும் மோப்ப நாய் ராக்கி வரவழைக்கப்பட்டது. சம்பவ இடத்தில் இருந்து மோப்பம் பிடித்த ராக்கி வீட்டிலிருந்து பின்பக்கமாக ஓடி சென்று நின்றது.
இதுகுறித்து ரோசனை போலீசார் வழக்குப்பதிவு செய்து, கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். கொள்ளை போன நகைகளின் மதிப்பு ரூ.12 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.