மார்த்தாண்டத்தில் 62 பவுன் நகை கொள்ளை: குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைப்பு
மார்த்தாண்டம் நகைக்கடையில் 62 பவுன் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
குழித்துறை:
மார்த்தாண்டம் நகைக்கடையில் 62 பவுன் நகைகளை கொள்ளையடித்த குற்றவாளிகளை பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது.
62 பவுன் நகைகள் கொள்ளை
மார்த்தாண்டம் அருகே உள்ள விரிகோடு பகுதியை சேர்ந்தவர் ராஜ செல்வின் ராஜ் (வயது 54). இவர் மார்த்தாண்டம் சி.எஸ்.ஐ. வணிக வளாகத்தில் நகைக்கடை நடத்தி வருகிறார்.
நேற்று முன் தினம் காலையில் இவர் வழக்கம் போல் நகைக்கடையை திறக்க சென்றார். அப்போது கடையின் ஷட்டர் பூட்டு உடைக்கப்பட்டு, ஷட்டர் திறந்து இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்த போது, விற்பனைக்காக வைத்திருந்த 62 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது.
5 தனிப்படை அமைப்பு
இது குறித்து ராஜ செல்வின் ராஜ் மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் தக்கலை துணை போலீஸ் சூப்பிரண்டு கணேசன், மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார்கள். சம்பவ இடத்தில் பதிவாகி இருந்த கைரேகைகளை தடயவியல் நிபுணர்கள் சேகரித்தனர்.
மேலும் கொள்ளை நடந்த நகைக்கடைக்கு எதிரே உள்ள கண்காணிப்பு கேமரா காட்சிகளை போலீசார் கைப்பற்றி ஆய்வு செய்தனர். அப்போது அதில் அடையாளம் தெரியாத உருவம் ஒன்று கடையை நோக்கி சென்று, கடையின் பூட்டை உடைத்து உள்ளே செல்வதும் தெரிய வந்துள்ளது. ஆனால் அதில் கொள்ளையனின் உருவம் தெளிவாக தெரியவில்லை.
இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரி கிரண் பிரசாத் உத்தரவின் பேரில் மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல் குமார் உள்பட 3 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 5 தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. அவர்கள் குற்றவாளிகள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
---------