தாராபுரம் பகுதியில் வானத்தில் ஜெட் விமானம் ஒன்று புகையை கக்கியபடி வட்டமிட்டு சென்றதுடன் பயங்கர வெடிச்சத்தம் கேட்டது. இது சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஜெட் விமானம்
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் நேற்று காலை சுமார் 10.15 மணியளவில் வானத்தில் ஜெட் விமானம் ஒன்று புகையை கக்கியபடி வட்டமிட்டது. சில நிமிடங்களில் பயங்கர வெடிச் சத்தம் கேட்டது. இதனால் வானத்தில் வெண் புகை சூழ்ந்து கொண்டது. இந்த சத்தம் தாராபுரம் சுற்று வட்டாரம் மட்டுமின்றி காங்கயம், வெள்ளகோவில், கரூர், நாமக்கல் உள்ளிட்ட பகுதியில் கேட்டதாக கூறப்படுகிறது.
இதனால் தாராபுரம் பகுதி மக்கள் நிலஅதிர்வு ஏற்பட்டு விட்டதோ என பயந்து வீட்டை விட்டு வெளியேறினர். இதனால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
வெடிச்சத்தம்
இது குறித்து தாராபுரம் பகுதி பொதுமக்கள் கூறுகையில், "காலை 10.15 மணிக்கு வானத்தில் ஜெட் விமானம் ஒன்று அதிக சத்தத்துடன் பறந்து வட்டமிட்டது. பின்னர் திடீரென பயங்கர வெடி சத்தம் கேட்டது. அந்த சத்தம் இடியை விட 10 மடங்கு அதிகமாக இருந்தது. இந்த சத்தம் சுமார் 100 கிலோ மீட்டர் தூரம் வரை அதிர்வலையை ஏற்படுத்தியது.
பிறகு வானத்தை பார்த்தபோது வானவில் போன்ற மிகப்பெரிய தோற்றத்தில் வெண்புகை வட்டமாக தென்பட்டது. ஜெட் விமானம் சென்றதால் ஏற்பட்ட சத்தமா, அல்லது ஜெட் விமானம் வெடித்ததா அல்லது மர்ம பொருள் ஏதாவது வானில் வெடித்துவிட்டதா என்று தெரியவில்லை." என்றனர்.