மரத்தில் ஜீப் மோதி தாய்-மகன் பலி

வடமதுரை அருகே, சாலையோர மரத்தில் ஜீப் மோதி தாய்-மகன் பலியாகினர். பழனி முருகன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தி விட்டு, திரும்பியபோது விபத்தில் சிக்கியது பரிதாபத்தை ஏற்படுத்தியது.

Update: 2023-01-16 20:53 GMT

திண்டுக்கல்,

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள குழிச்சோலை பகுதியை சேர்ந்தவர் மோகன்ராஜ் (வயது 37). அவருடைய மனைவி நித்யா (28). இந்த தம்பதியின் மகன் லித்துன் (7). இவனுக்கு, பழனி முருகன் கோவிலில் முடி காணிக்கையை நேர்த்திக்கடன் செலுத்த மோகன்ராஜ் முடிவு செய்தார்.

இதற்காக தனது மனைவி, மகன் மற்றும் தாய் அழகுமணி (55) ஆகியோருடன் ஒரு ஜீப்பில் பழனி முருகன் கோவிலுக்கு மோகன்ராஜ் சென்றார். கோவிலில் லித்துனுக்கு முடி காணிக்கை செலுத்தினர்.

பின்னர் அவர்கள் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் உள்ள தங்களது உறவினர் வீட்டுக்கு புறப்பட்டனர். ஜீப்பை மோகன்ராஜ் ஓட்டினார். முன்னால் அவரது தாய் அழகுமணி அமர்ந்திருந்தார். பின்பக்க இருக்கையில் நித்யா, லித்துன் ஆகியோர் உட்கார்ந்து இருந்தனர்.

தாய்-மகன் பலி

பழனியில் இருந்து ஒட்டன்சத்திரம் வந்த அவர்கள், வேடசந்தூர் வழியாக மணப்பாறை செல்ல முடிவு செய்தனர். இதற்காக வேடசந்தூர்-வடமதுரை சாலையில் சென்றனர். வடமதுரையை அடுத்த கெச்சானிபட்டியில் உள்ள தனியார் எண்ணெய் ஆலை அருகே ஜீப் வந்தது.

அப்போது சாலையின் குறுக்கே மோட்டார் சைக்கிள் ஒன்று வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மோகன்ராஜ், அதன் மீது மோதாமல் இருக்க ஜீப்பை திருப்பினார். இதில் கட்டுப்பாட்டை இழந்த ஜீப் தாறுமாறாக ஓடி, சாலையோரத்தில் நின்றிருந்த புளியமரத்தின் மீது பயங்கரமாக மோதி நின்றது.

கண்இமைக்கும் நேரத்தில் நடந்த இந்த விபத்தில் மோகன்ராஜ், அழகுமணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். பின் இருக்கையில் இருந்த நித்யா, லித்துன் ஆகியோர் படுகாயங்களுடன் ஜீப்புக்குள் சிக்கி கொண்டனர். அவர்களை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்