ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தை அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் நிராகரிப்பு
ஜெயங்கொண்டம் நகர்மன்ற கூட்டத்தை அ.தி.மு.க., பா.ம.க. கவுன்சிலர்கள் நிராகரித்தனர்.
ஜெயங்கொண்டத்தில் நகர்மன்ற சாதாரண அவசர கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர மன்ற தலைவர் சுமதி சிவகுமார் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் வெ.கொ.கருணாநிதி, நகராட்சி ஆணையர் மூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னதாக நகராட்சி மேலாளர் அன்புச்செல்வி வரவேற்று பேசினார். கூட்டத்தில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் சட்டமன்ற அறிவிப்பில் ஜெயங்கொண்டம் நகராட்சி 2-ம் நிலை நகராட்சியில் இருந்து முதல் நிலை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தமைக்கு நகர்மன்றத்தின் சார்பாக நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றினர். கூட்டத்தில் பெரும்பாலான உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை. குறிப்பாக அ.தி.மு.க. மற்றும் பா.ம.க. கவுன்சிலர்கள் கூட்டத்தை நிராகரித்து விட்டனர். மேலும் இதுகுறித்து சில கவுன்சிலர்களிடம் கேட்டபோது, கூட்டத்திற்கு 2 நாட்களுக்கு முன்பாக அழைப்பு கொடுக்காமல் கூட்டம் நடக்கும் அன்று அழைப்பு விடுத்ததால் வரவில்லை என தெரிவித்தனர்.