ஜெயலலிதா கார் டிரைவரின் மனைவியை மிரட்டிய உறவினர் சிறையில் அடைப்பு
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் வழக்கை வாபஸ் வாங்குமாறு ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் மனைவியை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட உறவினர் சிறையில் அடைக்கப்பட்டார்.
மேச்சேரி:
கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் வழக்கை வாபஸ் வாங்குமாறு ஜெயலலிதா கார் டிரைவர் கனகராஜின் மனைவியை மிரட்டியதாக கைது செய்யப்பட்ட உறவினர் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோடநாடு சம்பவம்
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு எஸ்டேட் காவலாளி ஓம் பகதூர் கொலை செய்யப்பட்டதுடன், அங்கிருந்து ஆவணங்கள் மற்றும் பல்வேறு பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கடந்த 2017-ம் ஆண்டு பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் நடந்த சில நாட்களில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே விபத்தில் பலியானார்.
கனகராஜ் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய மனைவி கலைவாணி போலீசில் புகார் செய்தார். மேலும் போலீசார் விசாரணை நடத்தி கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தடயங்களை மறைக்க துணை போனதாக கனகராஜின் மூத்த அண்ணன் தனபால் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
கனகராஜின் மனைவியிடம் தகராறு
இதனிடையே சென்னையில் தன்னுடைய குழந்தைகளுடன் வசித்து வந்த கலைவாணியை, கனகராஜின் 2-வது அண்ணனான சமுத்திரம் சித்திரப்பாளையம் பகுதியை சேர்ந்த பழனிவேல் (வயது 44), சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் அருகே உள்ள பணிக்கனூருக்கு வருமாறு அழைத்தார். அங்கு வைத்து கனகராஜிக்கு சொந்தமான சொத்துக்களை விற்று பணத்தை தருவதாகவும் அவர் கூறியுள்ளார். இதனை நம்பிய கலைவாணி தன்னுடைய குழந்தைகளுடன் பணிக்கனூருக்கு சமீபத்தில் வந்தார்.
அப்போது பழனிவேல், குழந்தைகளை தன்னுடைய பெற்றோர் பார்க்க வேண்டும் என்று கூறி உள்ளார். அதற்கு கலைவாணி மறுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பழனிவேல், கலைவாணியை தகாத வார்த்தைகளால் திட்டி அவரிடம் தகராறு செய்துள்ளார்.
புகார் மனு
இதுகுறித்து கலைவாணி ஜலகண்டாபுரம் போலீசில் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
எனது நிலத்தை விற்றுத்தருவதாக கூறி பழனிவேல் என்னை ஊருக்கு அழைத்தார். ஆனால் நான் இங்கு வந்த பிறகு, உனது நிலத்தை நீயே விலை பேசி விற்று எடுத்துக்கொள் என கூறினார். பின்பு அவர், பணிக்கனூரில் உள்ள உறவினர் வீட்டிற்கு அழைத்து வந்து நிலத்தை வாங்க வருபவரிடம் நிலத்தை அவர்கள் வாங்காத அளவுக்கு பிரச்சினை செய்தார். இதனால் நிலம் வாங்க வந்தவர்கள் சென்று விட்டனர்.
அதற்கு ஏன் இப்படி செய்தீர்கள்? என நான் பழனிவேலிடம் கேட்டேன். அதற்கு, எனது தம்பியின் சொத்து மட்டும் வந்து கேட்கிறாயே? நீ கொடுத்த புகாரால் தான் என் அண்ணன் தனபால் ஜெயிலுக்கு போய் இருக்கிறார். இதுவரை ரூ.4 லட்சம் செலவு ஆயிருக்கு. பணத்தை கொடுத்துவிட்டு வழக்கை வாபஸ் வாங்கினால் தான் நிலத்தை விற்றுகொடுப்பேன். முடியாது என்றால் நீ சென்னைக்கு போக முடியாது என்று என்னை பழனிவேல் மிரட்டினார்.
மானப்பங்க முயற்சி
மேலும் இது எங்க ஊரு, என்னை யாரும், எதுவும் செய்ய முடியாது எனக்கூறி தகாத வார்த்தையில் திட்டியதுடன், ஏன் போலீசில் புகார் கொடுத்தாய் எனக்கூறி மிரட்டினார். இதனால் மன உளைச்சல் அடைந்த நான், பயந்துகொண்டு ஊரில் இருந்து தப்பி வர முயலும் போது பழனிவேல், எனது சேலையை பிடித்து இழுத்து மானபங்கப்படுத்த முயன்றார். எனவே எனக்கும், எனது குழந்தைகளுக்கும் பாதுகாப்பு இல்லை.
இவ்வாறு அதில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இந்த புகாரின் பேரில், பழனிவேல் மீது 294 பி (தகாத வார்த்தைகளால் திட்டுதல்), 195 (ஏ) (மன உளைச்சல் ஏற்படுத்துதல்), 354 (பெண்ணை சேலையை பிடித்து இழுத்து மானப்பங்கப்படுத்த முயற்சி), 506-ஐ (மிரட்டல்) மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டப்பிரிவு ஆகிய 5 குற்றப்பிரிவுகளின் கீழ் ஜலகண்டாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.
சிறையில் அடைப்பு
இதையடுத்து பழனிவேலை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்திய போலீசார் நேற்று அவரை மேட்டூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் கோர்ட்டு உத்தரவின் பேரில், சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.