ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள்

ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

Update: 2023-07-09 16:09 GMT

ஜமுனாமரத்தூரில் ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார்.

அமைச்சர் ஆய்வு

கலசபாக்கம் தொகுதிக்குட்பட்ட ஜமுனாமரத்தூரில் வருகிற 18-ந் தேதி நடைபெற உள்ள ஜவ்வாதுமலை கோடை விழா முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மேலும் விழாவின்போது திறக்கப்பட உள்ள புதிதாக கட்டப்பட்டு உள்ள சுற்றுலா மாளிகையும் அவர் பார்வையிட்டார்.

பின்னர் அவர் கூறியதாவது:-

வருகிற 18-ந் தேதி ஜவ்வாதுமலையில் கோடை விழா நடைபெற உள்ளது. இந்த கோடை விழாவிற்கு தமிழக அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிறார். இந்த ஆண்டு கோடை விழா சிறப்பான முறையில் பிரமாண்டமாக நடைபெற வேண்டும்.

கண்காட்சிகள்

இந்த கோடை விழாவில் கண்காட்சிகள் அதிகளவு அமைக்க வேண்டும். ஜவ்வாதுமலையில் ரூ.3 கோடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா மாளிகையையும், ரூ.30 லட்சத்தில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள பயணியர் நிழற்குடையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளார். இதுபோல் பல கட்டிட திறப்பு விழாக்கள், பல நலத்திட்ட உதவிகள் வழங்கவும் உள்ளார்.

அதுமட்டுமில்லாமல் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்துவதற்காகவும் இந்த ஜவ்வாது மலையில் புதிய தொழிற்சங்கம் விரைவில் தொடங்கப்படும். அதனால் மலைவாழ் மக்களின் வாழ்க்கை தரம் உயரும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், எம்.எல்.ஏ.க்கள் பெ.சு.தி.சரவணன், மு.பெ.கிரி, தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஸ்ரீதரன், துணை தலைவர் மகேஸ்வரி செல்வம், ஒன்றிய செயலாளர் ப.கேசவன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரகாஷ், ரேணுகோபால், மற்றும் அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்