லாரி சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் படுகாயம்
ஓசூரில் குப்பை சேகரிக்கும் பணியின்போது லாரி சக்கரத்தில் சிக்கி துப்புரவு பணியாளர் படுகாயம்
ஓசூர்:
ஓசூர் அருகே மிடுதேப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் தவேந்திரன் (வயது 52). துப்புரவு தொழிலாளி. இவர் ஓசூர் மாநகராட்சியில் ஒப்பந்த தொழிலாளராக வேலை பார்த்து வருகிறார். நேற்று, ஓசூர் பஸ் நிலைய பகுதியில் அவர் டிரைவர் பசப்பா உள்ளிட்ட தொழிலாளர்களுடன் குப்பைகள் சேகரிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார். எதிர்பாராதவிதமாக தவேந்திரன் தடுமாறி மாநகராட்சி குப்பை லாரியின் சக்கரத்தில் விழுந்தார். அப்போது லாரி சக்கரம் அவர் மீது ஏறியது. இதில் அவருக்கு கால்கள் மற்றும் உடம்பின் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் அவரை மீட்டு, ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு தவேந்திரன் அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து ஓசூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.