தாலுகாக்களில் ஜமாபந்தி தொடக்கம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள தாலுகாக்களில் ஜமாபந்தி தொடங்கியது. கலவையில் கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்தார்.

Update: 2023-05-24 17:33 GMT

கலவை

கலவை தாலுகா அலுவலகத்தில் நேற்று ஜமாபந்தி நடந்தது. இதனை கலெக்டர் வளர்மதி தொடங்கி வைத்து மரக்கன்று நட்டார். இந்த ஜமாபந்தியில் வருவாய்த் துறையின் மூலம் பராமரிக்கப்படும் 24 வகையான கணக்குகள் தணிக்கை செய்யப்படுகிறது.

நிலவரி நீர் தீர்வு, கிராம கணக்கு, பயிர் சாகுபடி, பட்டா பெயர் மாற்றம் போன்றவற்றுக்கு தீர்வு காணப்படுகிறது. வருகிற 26-ந்் தேதி வரை ஜமாபந்தி நடக்கிறது. இதில் கிராம மக்கள் கோரிக்கை மனுக்கள் வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நிறைவு நாளில் மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டு, நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்க உள்ளார்.

நிகழ்ச்சியில் தாசில்தார் மதிவாணன், கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாபு, வேளாண்மை இணை இயக்குனர் விஸ்வநாதன், திமிரி வட்டார வளர்ச்சி அலுவலர் நவாஸ், மண்டல துணை தாசில்தார் தேவராஜ், வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அதிகாரிகள் ஸ்ரீதர், தீனதயாளன், விஜி, ராணி, கீதா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஆற்காடு

ஆற்காடு தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. ராணிப்பேட்டை உதவி கலெக்டர் பா.வினோத்குமார் தலைமை தாங்கி தொடங்கிவைத்தார். இதில் திமிரி உள்வட்டத்தை சேர்ந்த வெங்கடாபுரம், குப்பம், புங்கனூர், காவனூர், வரகூர், பட்டணம், ஆணைமல்லூர், மேல் நாய்க்கன்பாளையம், பாடி, நம்பரை, துர்கம் உள்ளிட்ட 11 வருவாய்கிராம கணக்கு, பயிர் அடங்கல், சாகுபடி கணக்கு, நிலத்தீர்வை, அரசு நிலங்கள் உள்பட பல்வேறு பதிவேடுகளை பார்வையிட்டு சரிபார்த்தார்.

தொடர்ந்து கிராம பொதுமக்களிடம் பட்டா மாற்றம், முதியோர் உதவித் தொகை, பொது பிரச்சினைகள், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் உதவி கலெக்டரிடம் வழங்கினார்கள். நிலமேம்பாடு திட்ட அ.பதிவேடு நகல் வேண்டி மனு கொடுத்த காவனூர் கிராமத்தை சேர்ந்த சித்ரா என்ற மனுதாரருக்கு உடனடியாக நகல் வழங்கப்பட்டது. இதில் தாசில்தார் வசந்தி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நெமிலி

நெமிலி தாலுகா அலுவலகத்தில் சப்- கலெக்டர் பாத்திமா தலைமையில் ஜமாபந்தி நடைபெற்றது. நெமிலி தாசில்தார் பாலசந்தர், சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் ஆனந்தன் முன்னிலை வகித்தனர். இதில் வீட்டுமனை, முதியோர் உதவிதொகை, ரேஷன் கார்டு, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உள்ளிட்டவைகள் வழங்கக்கோரி 40-க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.

துணை தாசில்தார்கள் பன்னீர்செல்வம், பாஸ்கரன், வட்ட வழங்கல் அலுவலர் மகாலட்சுமி, வருவாய் ஆய்வாளர்கள் கனிமொழி, தனலட்சுமி, வேல்விழி, கிராம நிர்வாக அலுவலர்கள் உள்ளிட்ட பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

அரக்கோணம்

அரக்கோணம் தாலுகாவிற்கான ஜமாபந்தி பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முரளி தலைமையில் நடைபெற்றது. அரக்கோணம் தாலுகாவிற்கு உட்பட்ட கிராமங்களை சேர்த்த பொதுமக்கள் மனு அளித்தனர். இதில் 51 மனுக்கள் பெறப்பட்டன. அதில் ஒரு பட்டா மாறுதலுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. மீதமுள்ள மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களிடம் விசாரணைக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கையில் உள்ளது. நிகழ்ச்சியில் தாசில்தார் சண்முகசுந்தரம் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்பட துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஜமாபந்தி நிகழ்ச்சி வருகிற 31-ந் தேதி வரை நடைபெறும் என தாசில்தார் சண்முகசுந்தரம் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்