ஜல்லிக்கட்டு காளைகளுக்கு தீவிர பயிற்சி

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிக்காக எருமப்பட்டி பகுதியில் காளைகளுக்கு உரிமையாளர்கள் தீவிர பயிற்சி அளித்து வருகின்றனர்.

Update: 2022-12-22 18:53 GMT

எருமப்பட்டி

ஜல்லிக்கட்டு

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. நாமக்கல் மாவட்டத்தில் எருமப்பட்டி ஒன்றியத்தில் மட்டும் பொட்டிரெட்டிப்பட்டி, அலங்காநத்தம், எருமப்பட்டி, பண்ணக்காரன்பட்டி, போடிநாயக்கன்பட்டி, சிவநாயக்கன்பட்டி, கரட்டுபுதூர் பகுதிகளில் நடத்தப்பட்டு வந்தது. ஆனால் தற்போது ஒரிரு இடங்களில் மட்டுமே நடத்தப்படுகிறது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளில் வெற்றிபெறும் காளைகளுக்கு, அதாவது யாராலும் அடக்க முடியாத காளைகளின் உரிமையாளர்களுக்கு தங்கம், வெள்ளி, ரொக்கப்பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்படும். இதனால் எருமப்பட்டி சுற்று வட்டாரங்களில் அதிக அளவில் ஜல்லிக்கட்டு காளைகள் வளர்க்கப்பட்டு வருகிறது. இவை இதர காளைகளில் இருந்து முற்றிலும் மாறுப்பட்டு வளர்க்கப்படுகின்றன.

காளைகளுக்கு பயிற்சி

ஆண்டுதோறும் நவம்பர், டிசம்பர் மாதங்களில் இந்த காளைகளுக்கு உரிமையாளர்கள் பயிற்சி வழங்குவார்கள். குறிப்பாக துணியை காட்டி முட்ட வைப்பது, மணல்மேடுகளை உருவாக்கி முட்டுவதற்கு பயிற்சி அளிப்பது என பல்வேறு பயிற்சிகளை அளித்து வருகின்றனர்.

வருகிற ஆண்டும் பொங்கல் பண்டிகையை யொட்டி ஜல்லிக்கட்டு நடத்த மாவட்டத்தில் பல்வேறு பகுதியினர் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர். இதேபோல் சேலம், புதுக்கோட்டை, மதுரை போன்ற பகுதிகளுக்கும் இங்கிருந்து ஜல்லிக்கட்டு காளைகள் சரக்கு ஆட்டோ மூலம் அனுப்பி வைக்கப்படும். இதனால் எருமப்பட்டி சுற்றுவட்டார பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அவற்றின் உரிமையாளர்கள் தீவிர பயிற்சி கொடுத்து வருகின்றனர்.

மோட்டார்சைக்கிள் பரிசு

இது குறித்து எருமப்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு காளை உரிமையாளர் விக்டோரியா செந்தில் கூறியதாவது :-

நான் சுமார் 20 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு காளைகளை வளர்த்து வருகிறேன். தற்பொழுது என்னிடம் 9 ஜல்லிக்கட்டு காளைகள் உள்ளன. என்னுடைய காளைகள் அனைத்து மாவட்டங்களிலும் ஜல்லிக்கட்டுக்கு சென்று வந்துள்ளன.

தற்போது காளைகளை அடக்கும் வீரர்களுக்கு கார் உள்ளிட்ட வாகனங்கள் பரிசாக வழங்கப்படுகிறது. ஆனால் முதன்முதலில் என்னுடைய மாட்டுக்கு தான் முதல் பரிசாக மாடு பிடிக்கும் வீரருக்கு புல்லட் பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார்கள். ஆனால் மாடு பிடிபடவில்லை. இதுதவிர என்னுடைய காளைகள் மூலம் பீரோ, கட்டில், சைக்கிள். தங்க காயின் போன்ற எண்ணற்ற பரிசுகளை வாங்கி உள்ளேன். 9 காளைகளுக்கும் தினசரி சுமார் ரூ.1500 செலவு செய்து வருகிறேன். நான் மட்டும் இன்றி காளைகளை வளர்த்து வரும் ஒவ்வொருவரும் வீட்டில் ஒரு குழந்தையை போலதான் வளர்த்து பாதுகாத்து வருகிறோம். ஜல்லிக்கட்டு போட்டியை ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் நடத்த தமிழக அரசு ஊக்கப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்