சேலம் மாவட்டத்தில்அனுமதியின்றி நடந்த ஜல்லிக்கட்டு-எருதாட்டம்

சேலம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு, எருதாட்டம் நடைபெற்றன.

Update: 2023-01-17 19:59 GMT

கெங்கவல்லி, 

ஜல்லிக்கட்டு

கெங்கவல்லி அருகே கூடமலை ஊராட்சியில் காணும் பொங்கல் பண்டிகையான நேற்று அந்த பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி வாடிவாசல் அமைத்து ஜல்லிக்கட்டு போட்டியை அனுமதியின்றி நடத்தினர். இதில் 50-க்கும் மேற்பட்ட மாடுகள் கலந்து கொண்டன.

இது குறித்து தகவல் அறிந்ததும், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மணிமாறன், கூடமலைக்கு சென்று ஜல்லிக்கட்டு போட்டி அனுமதி இல்லாமல் நடைபெற்றதை அடுத்து உடனடியாக அனைவரையும் கலைந்து செல்லுமாறு கூறினார்.

அனைத்து மாடுபிடி வீரர்கள் மற்றும் மாட்டின் உரிமையாளர்கள் கலைந்து சென்றனர். இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் ஒருவருக்கு லேசான காயம் ஏற்பட்டு ஆத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

செந்தாரப்பட்டி

தம்மம்பட்டி அடுத்துள்ள செந்தாரப்பட்டி மற்றும் கொண்டையம்பள்ளி ஆகிய பகுதிகளில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடைபெற்றது. செந்தாரப்பட்டி மற்றும் கொண்டையம்பள்ளி ஜல்லிக்கட்டு விழாவில் காயம் அடைந்த 32 பேர், செந்தாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த ஜல்லிக்கட்டில் செந்தாரப்பட்டி சுமார் 120 காளைகளும் கொண்டையம்பள்ளி பகுதியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு விழாவில் 150 காளைகளும் கலந்து கொண்டன. இது குறித்து தகவல் அறிந்த தம்மம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அனுமதி பெறாமல் நடைபெறும் ஜல்லிக்கட்டு விழாவை நிறுத்திவிட்டு கலைந்து செல்லுமாறும் கூறி ஜல்லிக்கட்டை நிறுத்தினர். அதன் பிறகு அங்கு கூடியிருந்த பொதுமக்கள் கலைந்து சென்றனர். மேலும் இந்த பகுதிகளில் அவிழ்த்து விடப்பட்ட காளைகள் பிடிபடாமல் மலை மேல் ஏறி சென்று விட்டதாக கூறி காளையின் உரிமையாளர்கள் தங்கள் காளையின் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் அனுப்பி தகவல் அறிந்தால் தொடர்பு கொள்ளுமாறு தேடி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்