அடங்க மறுத்த காளைகளை மடக்கி பிடித்த வீரர்கள்

ராசிபுரம் அருகே தும்பல்பட்டியில் நடந்த ஜல்லிக்கட்டில் அடங்க மறுத்த காளைகளை வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

Update: 2023-05-27 18:45 GMT

ராசிபுரம்

ஜல்லிக்கட்டு

ராசிபுரம் அருகே தும்பல்பட்டி கிராமத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் சேலம், நாமக்கல், திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 450 காளைகளை அதன் உரிமையாளர்கள் கொண்டு வந்திருந்தனர். 300 மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர்.

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொண்ட பின்னரே இதில் பங்கேற்க அனுமதி வழங்கப்பட்டது.

மேலும் ஜல்லிக்கட்டில் கலந்து கொள்பவர்கள் மற்றும் காளைகள் காயம் அடைந்தால் உடனடியாக சிகிச்சை அளிப்பதற்காக 6 மருத்துவக்குழு, காளைகளுக்கான 8 கால்நடை மருத்துவக்குழு தயார் நிலையில் இருந்தன.

அமைச்சர், கலெக்டர் தொடங்கி வைத்தனர்

ஜல்லிக்கட்டை வனத்துறை அமைச்சர் மதிவேந்தன் மற்றும் கலெக்டர் உமா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். முன்னதாக அமைச்சர், கலெக்டர் உறுதிமொழியை வாசிக்க மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.

இதையடுத்து வாடிவாசல் வழியாக சீறிப்பாய்ந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்க முயன்றனர். இதில் ஒரு சில காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபட்டன. பெரும்பாலான காளைகள் மாடுபிடி வீரர்களிடம் பிடிபடாமல் சீறிப்பாய்ந்து ஓடி விட்டன. மேலும் மாடுபிடி வீரர்களுக்கோ, காளைகளுக்கோ எந்தவிதமான காயமும் இன்றி இந்த ஜல்லிக்கட்டு நடந்தது.

Jallikattu

ஜல்லிக்கட்டை காண்பதற்காக சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் காலையில் இருந்தே வந்து குவிந்தனர். வாடிவாசல் வழியே சீறிப்பாய்ந்து வந்த காளைகளை அடக்க முயன்ற மாடுபிடி வீரர்களை பார்வையாளர்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்து உற்சாகப்படுத்தினர். ஜல்லிக்கட்டில் காளைகளை பிடித்த வீரர்களுக்கும், பிடிபடாமல் சென்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி. ராமசாமி, நாமக்கல் உதவி கலெக்டர் (பொறுப்பு) சுகந்தி, நாமக்கல் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜு, ராசிபுரம் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், கால்நடை பராமரிப்புத் துறை இணை இயக்குனர் டாக்டர் நடராஜன், ராசிபுரம் தாசில்தார் சுரேஷ், நாமகிரிப்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலமுருகன், சரவணன் மற்றும் விழா குழுவினர் போட்டி அமைப்பாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டையொட்டி 350-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்