முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை
திசையன்விளை அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
வள்ளியூர்:
திசையன்விளை அருகே ரியல் எஸ்டேட் உரிமையாளரை அரிவாளால் தாக்கி கொலை செய்ய முயன்ற வழக்கில் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் உள்பட 6 பேருக்கு சிறை தண்டனை விதித்து வள்ளியூர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
ரியல் எஸ்டேட் உரிமையாளர்
நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள பெட்டைகுளத்தை சேர்ந்தவர் சுடலைகண்ணு (வயது 50). இவர் ரியல் எஸ்டேட் மற்றும் முள்வேலி அமைக்கும் தொழில் செய்து வருகிறார். இவர் உறுமன்குளத்தை சேர்ந்த சிலர் நம்பியாற்றில் இருந்து மாட்டு வண்டி மூலம் திருட்டுத்தனமாக மணல் அள்ளி வந்ததை திசையன்விளை போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்த முன்விரோதம் காரணமாக கடந்த 22.6.2011 அன்று உறுமன்குளத்தை சேர்ந்த அமைச்சியார் (45), சின்னத்துரை (40), பொன்இசக்கி (55), காளி (40), இசக்கிமுத்து (45), கருப்பசாமி (38), முத்து (40) மணிகண்டன் (38) ஆகியோர் சேர்ந்து சுடலைக்கண்ணுவை அரிவாளால் தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து சுடலைகண்ணு அளித்த புகாரின் பேரில் திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து வழக்கில் தொடர்புடைய 8 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சிறை தண்டனை
இந்த வழக்கு விசாரணை வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் வழக்கை விசாரித்த வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி பர்ஷத் பேகம் நேற்று பரப்பான தீர்ப்பை வழங்கினார்.
அதில் குற்றவழக்கில் தொடர்புடைய அமைச்சியார், சின்னத்துரை, பொன்இசக்கி ஆகிய மூன்று பேருக்கும் தலா 5 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அபராதத்தை செலுத்த தவறினால் மேலும் 3 மாதங்கள் சிறை தண்டனையும்,
காளி, இசக்கிமுத்து, கருப்பசாமி ஆகிய மூன்று பேருக்கும் 3 ஆண்டுகள் மற்றும் 9 மாதங்கள் சிறை தண்டனையும் விதித்தும் தீர்ப்பளித்தார்.
மேலும் வழக்கில் தொடர்புடைய முத்து, மணிகண்டன் ஆகிய இருவரையும் விடுதலை செய்து தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் தண்டனை பெற்ற பொன் இசக்கி என்பவர் பெட்டைகுளம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் என்பது குறிப்பிடத்தக்கது.