நிலம் அபகரிப்பு வழக்கில் அண்ணன்-தம்பிக்கு சிறை
போலி ஆவணம் தயாரித்து நிலம் அபகரிப்பு செய்த வழக்கில் அண்ணன் மற்றும் தம்பிக்கு தலா 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.
போடி சுப்புராஜ் நகரை சேர்ந்த அழகுமலை மகன் துரைச்சாமி. இவருடைய தந்தை பெயரில் இருந்த நிலத்தை கடமலைக்குண்டு மேலப்பட்டியை சேர்ந்த அறிவழகன் (62), அவருடைய தம்பி சந்தானம் (55) ஆகியோர் போலி ஆவணங்கள் தயாரித்து அபகரித்தனர். இதுகுறித்து கடந்த 2005-ம் ஆண்டு துரைச்சாமி கொடுத்த புகாரின் பேரில் தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கு தேனி ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நடந்து வந்தது. வழக்கின் இறுதி விசாரணை முடிந்ததை தொடர்ந்து, அறிவழகன், சந்தானம் ஆகிய 2 பேருக்கும் தலா 2 ஆண்டு சிறை தண்டனை மற்றும் தலா ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து மாஜிஸ்திரேட்டு லலிதா ராணி தீர்ப்பு கூறினார்.