ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம்

கோவையில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Update: 2023-06-24 18:45 GMT

கோவை

கோவையில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

ஜெகந்நாதர் கோவில்

கோவை கொடிசியா அருகே பிரசித்தி பெற்ற புரிஜெகந்நாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர். ஒடிசாவில் உள்ள உலக புகழ் பெற்ற புரிஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் கடந்த 20-ந் தேதி நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து கோவையில் நேற்று இஸ்கான் அமைப்பு சார்பில் ஜெகந்நாதர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது.

இதற் காக நேற்று காலை கோவை ராஜவீதியில் உள்ள தேர் முட்டியில் அலங்கரிக்கப்பட்ட தேர் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த தேரில் மதியம் ஜெகந்நாதர், பலதேவர், சுபத்ரா தேவியார் எழுந்தருளினர்.

தேரோட்டம்

அதைத்தொடர்ந்து இஸ்கான் இயக்கத்தை சேர்ந்த பானு சுவாமி மஹாராஜ் மற்றும் இயக்கத்தின் மண்டலச் செயலாளர் பக்தி வினோத சுவாமி மஹாராஜ் ஆகியோரின் முன்னிலையில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை இழுத்து சென்றனர்.

தேருக்கு முன்பாக பக்தர்கள் ஆடல், பாடல், கும்மியாட்டம் என நடனமாடியபடி சென்றனர். மேலும் பக்தர்கள் ஹரே கிருஷ்ணா, ஹரே ராமா என்று பஜனை பாடியபடி சென்றனர்.

தேரோட்டம் தேர்முட்டியில் தொடங்கி ஒப்பணக்கார வீதி, வைசியாள் வீதி, கருப்பண்ண கவுண்டர் வீதி வழியாக மீண்டும் தேர் முட்டியை வந்து அடைந்தது. வழியெங்கும் ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர். அவர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சிறப்பு பூஜைகள்

பின்னர் தேரில் இருந்து மூல விக்கிரங்கள் கோவை கொடிசியா வில் உள்ள கோவிலுக்கு கொண்டு செல்லப்பட்டு சிறப்பு பூஜை கள் நடத்தப்பட்டன. அங்கு பக்தி வினோத சுவாமி மகராஜ் ஆன்மிக சொற்பொழிவாற்றினார்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) மூத்த சன்னியாசிகள் மற்றும் பக்தர்கள் கலந்து கொள்ளும் ஆன்மிக கருத்தரங்கம், ஆன்மிகம் கேள்வி-பதில் நிகழ்ச்சி, சிறப்பு ஆராத னை, நாமசங்கீர்த்தனம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

மேலும் செய்திகள்