ஜேடர்பாளையம் படுகை அணையில் படகு இல்லம் சீரமைக்கப்படுமா?
ஜேடர்பாளையம் படுகை அணை பகுதியில் உள்ள படகு இல்லத்தை சீரமைக்கப்படுமா? பொதுமக்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
பரமத்திவேலூர்
ஜேடர்பாளையம் படுகை அணை
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கு அடுத்தபடியாக சுற்றுலா பயணிகள் அதிகம் வரக்கூடிய இடமாக, பரமத்திவேலூர் அருகே உள்ள ஜேடர்பாளையம் படுகை அணை மற்றும் அண்ணா சிறுவர் பூங்கா ஆகியவை உள்ளது. இங்கு சிற்ப வேலைபாடுகளுடன் கூடிய காளை, முயல், மான், ஒட்டகச்சிவிங்கி உள்பட பல்வேறு வகையான உருவ சிலைகளும் சிமெண்டால் உருவாக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் குழந்தைகள் விளையாடுவதற்கு ஏதுவாக ஊஞ்சல் மற்றும் விளையாட்டு உபகரணங்களும் பூங்காவில் இடம் பெற்றுள்ளது.
அதேபோல் சுற்றுலா பயணிகள் குளிப்பதற்கு ஏதுவாக தடுப்பணை அருகே பாதுகாப்புடன் கூடிய படித்துறை அமைக்கப்பட்டு, கழிவறை வசதிகளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படுகை அணை மற்றும் சிறுவர் பூங்காவில் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
சுற்றுலா பயணிகள்
சேலம், நாமக்கல், கரூர் மற்றும் திருச்சி மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலானவர்கள் குடும்பம் குடும்பமாக, விடுமுறை நாட்களில் ஜேடர்பாளையம் படுகை அணைக்கு செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுவது இல்லை. அதற்கு மேல் வயது உடையவர்களுக்கு ரூ.5 நுழைவு கட்டணமாக வசூலிக்கப்பட்டு வருகிறது.
மேலும் படுகை அணை பகுதிக்கு சுற்றுலா வருபவர்களுக்கு, சுவையான மீன்களும் சாப்பிடுவதற்கு கிடைக்கிறது. குறிப்பாக மீன்களை சுவைப்பதற்காகவே சுற்றுவட்டார பகுதி மக்கள் ஏராளமானோர் படுகை அணைக்கு வருவதை காண முடிகிறது.
படகு இல்லம்
இதனிடையே கடந்த 2016-ம் ஆண்டு இந்திய சுற்றுலா துறையின் நிதி உதவியுடன், தமிழக சுற்றுலாத்துறை ஒப்புதலுடன் அனைத்து வசதிகளுடன் கூடிய நவீன படகு இல்லமானது, மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டது. 6 பைபர் படகுகள் மற்றும் படகு சவாரி மேற்கொள்பவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் பயன்பாட்டில் இருந்தன.
ஆனால் தற்போது படகு இல்லம் செயல்படாமல் உள்ளது. மேலும் பைபர் படகுகள் குளத்தில் கேட்பாரற்று கிடக்கின்றன. அதனால் பெரும்பாலான சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர். எனவே படகு இல்லத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர். அதோடு சேதமடைந்துள்ள உருவச் சிலைகளை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்துகின்றனர்.
வேதனை அளிக்கிறது
இதுகுறித்து பரமத்திவேலூரை சேர்ந்த பழனிராஜ் கூறியதாவது:-
சாதாரண நாட்களில் 200 பேரும், விடுமுறை நாட்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோரும், ஆடி 18 மற்றும் பொங்கல், தீபாவளி போன்ற விசேஷ நாட்களில் பல்லாயிரக்கணக்கானோரும் படுகை அணை பகுதியில் திரளுகின்றனர். ஆனால் இங்குள்ள படகு இல்லம் செயல்படாமல் இருப்பது ஏமாற்றம் அளிக்கிறது.
நாமக்கல் மாவட்டத்தில் கொல்லிமலைக்கு பிறகு, இங்கு தான் படகு இல்லம் உள்ளது. அதை பயன்படுத்தபடாமல் பராமரிப்பின்றி கிடப்பது வேதனை அளிக்கிறது. எனவே அதை சீரமைத்து மீண்டும் சுற்றுலா பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். மேலும் சேதமடைந்துள்ள பொம்மைகளை சீரமைக்க வேண்டும். அப்போது தான் குழந்தைகளை அழைத்து வரும் பெற்றோரின் வருகை அதிகரிக்கும்.
பொழுதுபோக்கு அம்சங்கள்
வடகரையாத்தூரை சேர்ந்த மூர்த்தி:-
ஜேடர்பாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு பிரதான சுற்றுலா தலமாக படுகை அணை உள்ளது. இங்குள்ள பூங்கா மற்றும் அணை பகுதியில் குளிப்பதற்கு இளைஞர்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர். நானும், எங்கள் உறவினர்களுடன் வந்து மீன் சாப்பிட்டுவிட்டு குளித்துவிட்டு செல்வோம். எனவே இங்கு மேலும் சில பொழுதுபோக்கு அம்சங்களை அரசு ஏற்படுத்த வேண்டும். அதன் மூலம் கிராமப்புற மக்களுக்கு மிக சிறந்த சுற்றுலா தளமாக படுகை அணை விளங்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.