ஜாக்டோ ஜியோ ஆயத்த மாநாடு
பாளையங்கோட்டையில் ஜாக்டோ ஜியோ ஆயத்த மாநாடு நடந்தது.
நெல்லை மாவட்ட ஜாக்டோ ஜியோ சார்பில் ஆயத்த மாநாடு பாளையங்கோட்டையில் நேற்று நடந்தது. ஒருங்கிணைப்பாளர்கள் பால்ராஜ், பிரகாஷ், பால்கதிரவன், ஜான்பாரதி, சிவஞானம், வசந்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். மாநில ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினார்.
இதில் பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். முடக்கப்பட்ட அகவிலைப்படி நிலுவைத்தொகை, சரண்டர், உயர் கல்விக்கான ஊக்கத்தை ஆகியவற்றை வழங்க வேண்டும். 7-வது ஊதிய குழுவின் 21 மாத நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
மேலும் இந்த கோரிக்கைகளை வருகிற 5-ந் தேதி மாவட்ட அளவிலான உண்ணாவிரத போராட்டமும், 24-ந் தேதி மாவட்டம் முழுவதும் மனித சங்கிலி போராட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டது.