திருவாரூரில், விற்பனைக்கு குவிந்த பலாப்பழங்கள்

திருவாரூரில், விற்பனைக்கு குவிந்த பலாப்பழங்கள்

Update: 2023-04-24 18:45 GMT

சீசன் தொடங்கியதால் திருவாரூரில் பலாப்பழங்கள் விற்பனைக்கு குவிந்துள்ளது. தரத்திற்கு ஏற்றவாறு விலை நிர்ணயம் செய்துள்ளனர்.

பலாப்பழம்

முக்கனிகளுள் ஒன்று பலாப்பழம். இந்த பழம் குறிப்பிட்ட சீசனில் மட்டுமே கிடைக்க கூடியது. பலாப்பழம் சாப்பிடுவதற்கு சுவையானது மட்டுமல்ல, உடலுக்கும் நல்லது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலாப்பழத்தை விரும்பி சாப்பிடுவது உண்டு. பலாப்பழம் என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது பண்ருட்டி தான்.

இப்பகுதியில் உள்ள மண் வளம், தட்பவெப்ப நிலை ஆகியவை பலாப்பழம் வளமாகவும், சுவையாகவும் இருப்பதற்கு காரணம் ஆகும்.

ஊட்டச்சத்து மிக்கதும், மருத்துவ குணம் கொண்டதுமான பலாப்பழத்துக்கு செம்மண் கொண்ட நிலமான பண்ருட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்டு உள்ளது.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் அதிக அளவில் பலாப்பழம் விளைவிக்கப்படுகிறது. இந்த பகுதிகளில் விளைவிக்கப்படும் பலாப்பழங்களை தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் திருவாரூருக்கும் வியாபாரிகள் பலாப்பழங்களை விற்பனைக்காக கொண்டு வந்துள்ளனர்.

தரத்திற்கு ஏற்றவாறு விலை

திருவாரூரில் நேற்று பலாப்பழம் விற்பனை அதிகளவில் நடந்தது. தற்போது பலாப்பழம் சீசன் தொடங்கிவிட்டது. ஒரு முழு பலாப்பழம் அதன் தரத்திற்கு ஏற்றவாறு ரூ.250 முதல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல் பழத்தை உரித்து பலாச்சுழையை தனியாக எடுத்து சில்லறையாக அரைக்கிலோ ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், தற்போது தான் பலாப்பழம் சீசன் தொடங்கி விட்டது. பலாப்பழத்தை நாங்கள் பண்ருட்டி பகுதியில் இருந்து விற்பனைக்கு கொண்டு வருகிறோம். சித்திரை பருவம் மற்றும் எட்டுக்குடி கோவில் திருவிழா வரை பழங்கள் விற்பனை அதிகளில் இருக்கும். நடுத்தர பலாப்பழங்கள் (அதிக சுழை இல்லாத பழங்கள்) ரூ.200 முதல் விற்பனை செய்யப்படுகிறது.

விலை உயர வாய்ப்பு

பழத்தின் அளவை பொறுத்து விலை நிர்ணயம் செய்து விற்பனை செய்து வருகிறோம். தற்போது விலை குறைவாக உள்ளது. ஆனால் பழத்தின் சீசன் முடியும் காலத்தில் விலை அதிகளவில் இருக்கும். எட்டுக்குடி திருவிழா உள்ளதால் வெளி மாநிலம், நாடுகளுக்கு அனுப்புவதில்லை. திருவிழா முடிந்தால் பலாப்பழத்தை ஆந்திரா, மும்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி வைப்பார்கள்.

இதனால் உள்ளூர் வியாபாரிகளுக்கு விற்பனைக்கு போதிய அளவு பழங்கள் கிடைக்காது. இதனால் விலை உயர வாய்ப்பு உள்ளது. தொடர்ந்து அதன் வரத்தை பொறுத்து தான் விலை அமையும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்